ADDED : டிச 15, 2025 07:00 AM

கடலுார்: கடல் சீற்றமாக இருப்பதால் மீனவர்கள் வலையில் மீன்கள் கிடைக்காததால் விலை உயர்ந்துள்ளது.
'டிட்வா' புயல் கரையை கடந்ததும், தொடர்ந்து மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்நிலையில் கடல் பகுதியில் இருந்து கடுமையான தரைக்காற்று வீசி வருவதால் மீனவர்களால் படகில் கடலுக்குள் செல்ல முடியவில்லை.
கடலுார் பகுதியில், நேற்று ஒரு சில கிராமங்களில் இருந்து மீனவர்கள் கடலுக்கு சென்றனர். கடலில் கடும் காற்று வீசியதால் அவர்களுக்கு போதிய மீன்கள் கிடைக்கவில்லை.
நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் மீன் வாங்க மார்க்கெட்டிற்கு ஏராளமானோர் குவிந்தனர்.
ஆனால் மீன்கள் விலை வழக்கத்தை விட கூடுதலாக விற்பனை செய்யப்பட்டது.
வஞ்சரம் 750 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாகவும், சங்கரா 300 லிருந்து 400 ரூபாயாகவும், நெத்திலி 250 லிருந்து 300 ரூபாயாகவும், வவ்வால் 450 லிருந்து 500 ரூபாயாகவும், இறால் 250லிருந்து 300 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது.

