ADDED : மே 15, 2025 02:22 AM

கடலுார்: கடலுாரில் மீன்பிடி தடை காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மீன்பிடி விசைப்படகுகளை மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கடல் மீன்வளத்தை பாதுகாக்கும் வகையில் ஏப்.15 முதல் ஜூன் 14 வரை 61நாட்கள் கடலில் மீன்பிடிக்க அரசு தடை விதித்துள்ளது. இதனால் விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் மூலம் மீன் பிடிப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டு, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகளை பழுதுநீக்கம் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
ஆண்டுதோறும் மீன்பிடி தடைகாலத்தின் போது, விசைப்படகுகளை மட்டும் அதிகாரிகள் ஆய்வு செய்து அவை மீன்வளத்துறை சட்டத்திற்கு உட்பட்டுள்ளதா என ஆய்வு செய்வது வழக்கம்.
நேற்று கடலுார் மண்டல மீன்வளத்துறை துணைஇயக்குனர் வேல்முருகன், உதவிஇயக்குனர் யோகேஷ் மேற்பார்வையில் மீன்வளத்துறை அதிகாரிகள் துறைமுகம், முடசல் ஓடை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தனர். ஆய்வின் போது மீன்வளத்துறை விதிமுறைகளின் படி படகின் ஆவணங்கள், பதிவெண், தொலைதொடர்பு கருவிகள், தீயணைப்பான் கருவி, உயிர் காப்பு கவசம் உள்ளிட்டவை இருக்கிறதா என ஆய்வு செய்தனர். குறைபாடுகள் உள்ளதை நிவர்த்தி செய்யவும் அறிவறுத்தினர்.