/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மீன்பிடி விசைப்படகுகள் வரும் 14ம் தேதி ஆய்வு
/
மீன்பிடி விசைப்படகுகள் வரும் 14ம் தேதி ஆய்வு
ADDED : மே 03, 2025 01:57 AM
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் மீன்பிடி விசைப்படகுகளை மீன்வளத்துறை அலுவலர்கள் வரும் 14ம் தேதி ஆய்வு செய்ய உள்ளதாக கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறியுள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
அரசு கடல் மீன்வளத்தை பாதுகாக்கும் வகையில் கடந்த ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 61 நாட்கள் கடலில் மீன்பிடிக்க தடை விதித்துள்ளது. கடலுார் மாவட்டத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் மூலம் மீன் பிடிப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டு, மீனவர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகளை பழுது நீக்கம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்கின்றனர்.
அனைத்து வகை மீன்பிடி விசைப்படகுகளை கடலுார் மாவட்டத்தில் வரும் 14ம் தேதி மீன்வளத்துறை அலுவலர்கள் கள ஆய்வு நடத்த உள்ளனர். ஆய்வின் போது மீனவர்கள் மீன்பிடி விசைப் படகுகளை மீன்வளத்துறை விதிமுறைகளின் படி, படகுகளுக்கு பச்சை நிற வர்ணம் பூசி, படகின் பதிவு எண் எழுத வேண்டும்.
மேலும் படகு பதிவு குறித்த அனைத்து ஆவணங்கள், அதற்கான நகல்கள், தொலைதொடர்பு கருவிகள், தீயணைப்பான் கருவி, உயிர் காப்பு மிதவை, உயிர்காப்பு கவசம் ஆகியவற்றை ஆய்வுக் குழுவிடம் அவசியம் காண்பிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.
ஆய்வுக்கு உட்படுத்தப்படாத மீன்பிடி விசைப் படகுகளுக்கு மானிய விலையில் டீசல் வழங்குவது நிறுத்தப்பட்டு, மீனவர் படகு உரிமம் ரத்து செய்யப்பட்டு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
அதனால், மாவட்ட விசைப்படகு மீனவ உரிமையாளர்கள் அனைவரும் தங்களது பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத படகுகளை வரும் 14ம் தேதி ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.