/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வீரமாமுனிவர் கட்டிய ஆலயத்தில் கொடியேற்றம்
/
வீரமாமுனிவர் கட்டிய ஆலயத்தில் கொடியேற்றம்
ADDED : ஜன 16, 2025 03:53 AM

விருத்தாசலம் : கோணாங்குப்பத்தில் வீரமாமுனிவரால் கட்டப்பட்ட பெரியநாயகி அன்னை ஆலய ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
கடலுார் மாவட்டம், மங்கலம்பேட்டை அடுத்த கோணாங்குப்பம் கிராமத்தில், பாளையக்காரர்கள் மற்றும் தேம்பாவணி இயற்றிய வீரமாமுனிவரால் கட்டப்பட்ட புனித பெரியநாயகி அன்னை ஆலயம் உள்ளது.
இங்கு, ஜனவரி மாதத்தில் ஆண்டு திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் குழந்தைப்பேறு இல்லாதோர், திருமணம் ஆகாத இளைஞர்கள், இளம்பெண்கள் வேண்டினால், வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம். அதனால் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, ஆந்திரா உட்பட பல்வேறு மாநில பக்தர்கள் இந்த ஆலயத்திற்கு வருகின்றனர்.
இந்த ஆலயத்தில் 305வது ஆண்டு திருவிழா, நேற்று முன்தினம் இரவு, புதுச்சேரி, கடலுார் உயர்மறை மாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமையில் துவங்கியது. வாண வேடிக்கையுடன் ஆலய முகப்பில் உள்ள கொடி மரத்தில், புனித பெரியநாயகி அன்னை உருவம் பதித்த கொடியை பங்குத் தந்தை ஜார்ஜ் அந்தோணிசாமி ஏற்றினார்.தொடர்ந்து, சிறப்பு திருப்பலி நடந்தது. பங்குத்தந்தை ஆக்னல், முகாசபரூர் ஜமீன் பாளையக்காரர் வழித்தோன்றல் ரமேஷ் கச்சிராயர், தினேஷ்குமார் கச்சிராயர், இணை குரு ஆரோக்யதாஸ் மற்றும் மறைமாவட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
முக்கிய நிகழ்வாக, வரும் 23ம் தேதி தேர்த்திருவிழா, அன்றிரவு சிறப்பு திருப்பலி, புனித பெரியநாயகி அன்னை ஆலய தேர் பவனி நடக்கிறது.

