/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தொடர் மழையால் பூக்களின் விளைச்சல் குறைந்தது
/
தொடர் மழையால் பூக்களின் விளைச்சல் குறைந்தது
ADDED : டிச 01, 2025 06:26 AM

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் பகுதியில் தொடர் மழை காரணமாக பூக்கள் விளைச்சல் குறைந்துள்ளது.
காட்டுமன்னார்கோவில் அடுத்த குருங்குடி, கண்டமங்கலம், வீராணந்தபுரம், வெங்கடேசபுரம், மடப்புரம் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் பூக்கள் சாகுபடி செய்து வருகின்றனர்.
குறிப்பாக, மல்லி, முல்லை, கனகாம்பரம் துலுக்க சாமந்தி உள்ளிட்ட பல்வேறு பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.
இந்த பூக்களுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் சந்தைகளில் நல்ல கிராக்கி உள்ளது. ஆட்கள் பற்றாக்குறை காரணமாக காட்டுமன்னார்கோவில் பகுதியில் பூக்கள் சாகுபடியின் நில பரப்பு, பல மடங்கு குறைந்துவிட்டது.
தற்போது 400 ஏக்கர் பரப்பில் மட்டுமே பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 500 முதல் 600 கிலோ பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்த பூக்கள் உள்ளூர் வியாபாரத்திற்கும் மற்றும் சிதம்பரம், மயிலாடுதுறை போன்ற நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
தற்போது தொடர் மழை கா ரணமாக பூக்களின் விளைச்சலில், அதிகளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர் மழையால் மல்லிகை மற்றும் முல்லை பூக்கள் செடியில் பூச்சி தாக்குதலும், அழுகல் ஏற்பட்டு விளைச்சல் 50 சதவீதத்திற்கு குறைவாகி உள்ளது.
தற்போது, 100 முதல் 200 கிலோ அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. ஆனால், பூக்களின் விளைச்சலில், குறைவு ஏற்பட்டுள்ளதால் அதன் விலை கிடு கிடுவென உயர்ந்து காணப்படுகிறது.
கடந்த வாரம் வரை மல்லிகை மற்றும் முல்லைப் பூக்கள் கிலோ 300 முதல் 400 ரூபாய்க்கு விற்கப்பட்டது. தற்போது மல்லிகைப்பூ 1500 முதல் 2000 ரூபாயக்கும், முல்லைப் பூ ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது.
தொடர் மழையால் பூக்களின் விளைச்சல் குறைந்து உள்ளதால் உள்ளூர் விற்பனைக்கு மட்டுமே பயன்படும் அளவில் உள்ளது.

