/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நான்கு ஆண்டாக சீரமைக்கப்படாத சாலைக்கு... விடிவுகாலம்; ரூ. 25 கோடியில் பணிகள் துவங்கியது
/
நான்கு ஆண்டாக சீரமைக்கப்படாத சாலைக்கு... விடிவுகாலம்; ரூ. 25 கோடியில் பணிகள் துவங்கியது
நான்கு ஆண்டாக சீரமைக்கப்படாத சாலைக்கு... விடிவுகாலம்; ரூ. 25 கோடியில் பணிகள் துவங்கியது
நான்கு ஆண்டாக சீரமைக்கப்படாத சாலைக்கு... விடிவுகாலம்; ரூ. 25 கோடியில் பணிகள் துவங்கியது
ADDED : மார் 14, 2024 04:17 AM
கடலுார் : கடலுார் வழியாக செல்லும் முக்கிய சாலை, கடந்த 4 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் குண்டும் குழியமாக இருந்த நிலையில், ரூ. 25 கோடி மதிப்பில் சீரமைப்பு பணி துவங்கியுள்ளது.
விழுப்புரம்- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை (45A), நான்கு வழிச்சாலையாக அமைக்கப்பட்டு வருகிறது. அதையொட்டி, இச்சாலை, 2021ம் ஆண்டு முதல் மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (நகாய்) கட்டுப்பாட்டிற்கு சாலை வந்தது. அப்போது முதல், கடலுார் வழியாக சிதம்பரம் செல்லும் முக்கிய சாலையில், கடலுார் திருப்பாதிரிபுலியூர் இம்பிரியல் சாலை துவங்கி, பெரியக்காரைக்காடு பைபாஸ் ரோடு இணையும் வரையில், சாலையை பராமரிப்பதில் சிக்கல் எழுந்தது. நெடுஞ்சாலை துறையினர் நெடுஞ்சாலை ஆணையத்தை கைக்காட்டியதால், சாலை சீரமைக்கப்படாமல், குண்டும் குழியுமாக மாறி, மக்கள் கடும் அவதியடைந்து வந்தனர்.
கடலுாரில் துவங்கி, காரைக்கால் வரையில், சாலை சீர்கேடு அடைந்து அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வந்தது. இதனால், கடந்த 4 ஆண்டுகளாக இச்சாலையை கடக்க வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வந்தனர். பொதுமக்கள் பல முறை புகார் மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையதில், வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம், கலெக்டர் அருண்தம்புராஜ் ஆகியோர், நெடுஞ்சாலைத் துறை தலைமை அதிகாரிகளிடம் பேசி ரோடு சீரமைப்பு பணிக்கு நிதி பெற்றனர்.
விழுப்புரம்-நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலையொட்டி நகர பகுதியில் வரும் வளவனுார், கடலுார், பி.முட்லுார், லால்புரம், வேளக்குடி ஆகிய பகுதிகளில் 19.96 கி.மீட்டர் துாரத்திற்கு சாலை சீரமைப்பு பணிக்கு ரூ.36.93 கோடி நிதி நேற்று முன்தினம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதையடுத்து, கடலுார் அருகே முள்ளோடையில் இருந்து கடலுார் முதுநகர் பெரிய காரைக்காடு வரையில், 14.8 கி.மீட்டருக்கு, ரூ. 25 கோடி செலவில் சாலை சீரமைக்கப்பட உள்ளது. நிதி பெறப்பட்ட மறுநாளான நேற்றே, கடலுாரில் சாலை சீரமைப்பு பணியை நெடுஞ்சாலை துறையினர் துவங்கினர்.
முதற்கட்டமாக, கடலுாரில் அதிக சேதமடைந்த செல்லங்குப்பம் ஒரு வழிப்பாதை முதல் பச்சையாங்குப்பம் வரை சாலை மேம்படுத்தும் சீரமைப்பு பணிகள் துவங்கியது. ராட்சஷ இயந்திரம் மூலம் மேல் அடுக்கு தார் கலவையை வெட்டி எடுத்து சமப்படுத்தும் பணி நேற்று நடந்தது. சாலை சீரமைப்பு பணியை அமைச்சர் பன்னீர்செல்வம், கலெக்டர் அருண்தம்புராஜ் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ரவி, லட்சுமிதேவி, ஸ்ரீதேவி ஆகியோரிடம் பணியை தரமாகவும், விரைந்தும் முடிக்க உத்தரவிட்டனர்.

