/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி 'மாஜி' ரயில்வே ஊழியர் அசத்தல்
/
10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி 'மாஜி' ரயில்வே ஊழியர் அசத்தல்
10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி 'மாஜி' ரயில்வே ஊழியர் அசத்தல்
10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி 'மாஜி' ரயில்வே ஊழியர் அசத்தல்
ADDED : மே 16, 2025 11:11 PM

கிள்ளை: ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளார்.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்த கோவிலாம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் கோதண்டராமன்,69; ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். இவர், கடந்த 2022ம் ஆண்டு 8ம் வகுப்பு தனித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார்.
கடந்தாண்டு ஏப்., மாதம் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினார். அதில், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் மட்டுமே தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து ஜூலையில் நடந்த துணைத்தேர்வில், தமிழ் மற்றும் கணிதம் பாடங்களில் தேர்ச்சி பெற்றார். ஆங்கிலம் பாடத்தில் மட்டும் தேர்ச்சி பெறவில்லை.
மனம் தளராத கோதண்டராமன், கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பொதுத்தேர்வில் ஆங்கிலம் தேர்வு எழுதினார். தேர்வு முடிவு நேற்று வெளியானது. அதில், கோதண்டராமன், ஆங்கிலம் பாடத்தில் 60 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்று, கல்விக்கு வயது தடையில்லை என்பதை நிரூபித்துள்ளார்.
இதுகுறித்து கோதண்டராமன் கூறுகையில், 'குடும்ப சூழ்நிலையால் 6ம் வகுப்பு சேர்ந்தவுடன் படிப்பை பாதியில் நிறுத்தினேன். பின், ரயில்வேயில் பணியில் சேர்ந்தேன். கேங் மேன், கேட் கீப்பராக பணிபுரிந்தேன்.
பணி ஓய்வு பெற்ற பிறகு, எனது மகன் கூறியதன் பேரில், நேரடியாக 8ம் வகுப்பு தனித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றேன். தற்போது, 10ம் வகுப்பு தேர்விலும் தேர்ச்சி பெற்றேன். கல்விதான் வாழ்க்கையில் மிகவும் முக்கியம். அனைவரும் கல்வி கற்க வேண்டும்' என்றார்.