/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரூ.63.50 கோடி மதிப்பில் வெள்ள தடுப்பு பணி வீராணம் ஏரி திட்ட அலுவலகத்தில் அடிக்கல் நாட்டு விழா
/
ரூ.63.50 கோடி மதிப்பில் வெள்ள தடுப்பு பணி வீராணம் ஏரி திட்ட அலுவலகத்தில் அடிக்கல் நாட்டு விழா
ரூ.63.50 கோடி மதிப்பில் வெள்ள தடுப்பு பணி வீராணம் ஏரி திட்ட அலுவலகத்தில் அடிக்கல் நாட்டு விழா
ரூ.63.50 கோடி மதிப்பில் வெள்ள தடுப்பு பணி வீராணம் ஏரி திட்ட அலுவலகத்தில் அடிக்கல் நாட்டு விழா
ADDED : அக் 04, 2025 07:21 AM

காட்டுமன்னார்கோவில் : வீராணம் ஏரி நீர் பிடிப்பு பகுதியில் 63.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவான வெள்ள தடுப்பு பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
காட்டுமன்னார்கோவில் அடுத்த வீராணம் ஏரி டெல்டா பாசனம் மற்றும் சென்னை குடிநீருக்கு ஆதாரமாக உள்ளது. வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் நீர்வளத் துறை மூலம் வீராணம் ஏரி நீர் பிடிப்பு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை தடுக்கும் வகையில் விரிவான வெள்ள தடுப்பு பணிகளுக்கு அரசு ரூபாய் 63.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது.
இந்த திட்ட நிதி மூலம் கூடுதல் நீர் போக்கி மதகு கட்டுதல், வெள்ளியங்கால் ஓடை சேத்தியாத்தோப்பு பாழ் வாய்க்கால் துார்வாரி சீரமைக்கும் பணி மற்றும் டெல்டா பாசன வாய்க்கால்கள் துார் வரும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டி பணிகள் துவக்க விழா நேற்று காலை வீராணம் ஏரி திட்ட அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.
அமைச்சர் பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டி பணியை துவக்கி வைத்து நிருபர்களிடம் கூறியதாவது:
வீராணம் ஏரி மூலம் காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், புவனகிரி தாலுகா பகுதிகளில் 44 ஆயிரத்து 856 ஏக்கர் டெல்டா பாசன வசதி பெறுகிறது. கீழணை தண்ணீர் மூலம் சேத்தியாதோப்பு பகுதிகளில் 40 ஆயிரம் ஏக்கர் பரப்பில் விளைநிலங்கள் பாசன வசதி கிடைக்கிறது.
கடந்த 2024ம் ஆண்டில் வீராணம் ஏரிக்கு அதிக அளவாக 30 ஆயிரம் கன அடி அளவில் தண்ணீர் வரத்து இருந்ததால் ஏரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கிராமங்களில் தண்ணீர் புகுந்து பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
இதனை தடுக்கும் வகையில் அரசு விரிவான வெள்ள தடுப்பு பணிக்கு 63.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கி நடக்கிறது.
இந்தத் திட்டத்தில் வீராணம் ஏரியில் கூடுதல் நீர் போக்கி மதகு அமைக்க 29 கோடி ரூபாய் சேத்தியாத்தோப்பு பாழ்வாய்க்கால் துார்வாரி சீரமைக்கும் பணிக்கு 13. 50 கோடி ரூபாய்.
வீராணம் ஏரியில் உள்ள பழுதடைந்த இரும்பு ஷட்டர் சீரமைப்பு மற்றும் வெள்ளியங்கால் ஓடை துார்வாரி சீரமைக்கும் பணிக்கு 21 கோடி ரூபாய் என நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் வீராணம் ஏரி நீர் பிடிப்பு பகுதியில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு தடுக்கப்படும். வீராணம் ஏரி சுற்றுலா தளமாக மாற்ற அரசு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் முதல் கட்டமாக அரசு 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பூங்கா திட்டம் செயல்படுத்த உள்ளது.
இவ்வாறு அமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார்.
நிகழ்ச்சியில் சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ., நீர் ஆதாரத்துறை சிதம்பரம் கோட்ட செயற்பொறியாளர் காந்தரூபன், உதவி இன்ஜினியர்கள் கொளஞ்சிநாதன் படைக்காத்தான் சிவராஜ் மற்றும் விவசாய சங்க தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.