ADDED : பிப் 22, 2026 05:14 AM

கடலுார்: கடலுார் அடுத்த காரணப்பட்டு ஊராட்சியில் 109 பேருக்கு இலவச மனைப்பட்டா வழங்கப்பட்டது.
கடலுார் ஒன்றியம், காரணப்பட்டு ஊராட்சியில் உள்ள ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதி மக்கள், தங்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க 50 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின்பு அய்யப்பன் எம்.எல்.ஏ.,வை சந்தித்து மக்கள் கோரிக்கை விடுத்தனர். அய்யப்பன் எம்.எல்.ஏ.,வின் முயற்சியால், மனைப்பட்டா வழங்குவதற்கான இடத்தை தேர்வு செய்து பயனாளிகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை சார்பில் பயனாளிகளுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கும் விழா காரணப்பட்டு கிராமத்தில் நடந்தது. விழாவிற்கு அய்யப்பன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் கமலா, தாசில்தார் சேகர் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஊராட்சி தலைவர் தமிழரசி பிரகாஷ் வரவேற்றார். நிலவள வங்கி முன்னாள் இயக்குனர் ராமலிங்கம், வேல்முருகன், நந்தன், துணைத்தலைவர் மூர்த்தி, செல்வராஜ், நடராஜன், குமார், ரமேஷ், ஆறுமுகம், முருகவேல் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். வி.ஏ.ஓ., ராஜன்பாபு நன்றி கூறினார்.

