/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கனரக லாரி உரிமையாளர்கள் விருதையில் சாலை மறியல்
/
கனரக லாரி உரிமையாளர்கள் விருதையில் சாலை மறியல்
ADDED : ஆக 08, 2025 02:26 AM

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் கனரக லாரி உரிமையாளர் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம் ரயில்வே ஜங்ஷனில் சரக்கு ரயில் மூலம் வரும் உரம், நெல் மூட்டைகள் கடை மற்றும் குடோன்களுக்கு திருமுதுகுன்றம் சரக்குந்து உரிமையாளர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள லாரிகளில் மட்டுமே ஏற்றிச் செல்லப்படுகிறது.
இந்த சங்கத்தில், கடலுார் மாவட்ட கனரக வாகன உரிமையாளர் சங்கத்தில் உள்ளவர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். இதனால், அவர்களும் சரக்கு ரயிலில் வரும் சரக்குகளை லாரிகளில் எடுத்துச் சென்றனர்.
இந்நிலையில், மாவட்ட கனரக வாகன உரிமையாளர்கள் சங்கத்தினர், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் இருந்து நெல் மூட்டைகளை எடுத்துச் செல்வதற்கு வாடகை தொகை உயர்த்தி தரக்கோரி, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனை திருமுதுகுன்றம் சரக்குந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் புறக்கணித்தனர்.
மேலும், தங்கள் சங்கத்தில் மாவட்ட கனரக வாகன உரிமையாளர்கள் சங்கத்தினர் உறுப்பினராக இருக்ககூடாது. மேலும், ரயில்வே ஜங்ஷனில் சரக்குகளை ஏற்ற அவர்களை அனுமதிக்ககூடாது என தீர்மானம் நிறைவேற்றினர்.
ஆத்திரமடைந்த கனரக லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் நேற்று காலை 9:15 மணிக்கு புதுக்குப்பம் ரயில்வே ஜங்ஷன் அருகில் சாலை மறியல் செய்தனர். விருத்தாசலம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.
இதனையேற்று 9:30 மணிக்கு கலைந்து சென்றனர். மறியல் காரணமாக விருத்தாசலம் - உளுந்துார் பேட்டை சாலையில் 15 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.