/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வெளிவட்ட சாலை அமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத்துறை அலட்சியம்! போக்குவரத்து நெரிசலால் விழி பிதுங்கும் சிதம்பரம் நகர மக்கள்
/
வெளிவட்ட சாலை அமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத்துறை அலட்சியம்! போக்குவரத்து நெரிசலால் விழி பிதுங்கும் சிதம்பரம் நகர மக்கள்
வெளிவட்ட சாலை அமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத்துறை அலட்சியம்! போக்குவரத்து நெரிசலால் விழி பிதுங்கும் சிதம்பரம் நகர மக்கள்
வெளிவட்ட சாலை அமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத்துறை அலட்சியம்! போக்குவரத்து நெரிசலால் விழி பிதுங்கும் சிதம்பரம் நகர மக்கள்
ADDED : டிச 10, 2025 08:00 AM

சிதம்பரம்: சிதம்பரம் நகரப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், துவங்கப்பட்ட வெளிவட்ட சாலை பணி கிடப்பில் உள்ளதால், சிதம்பரம் நகரம் விழி பிதுங்கி வருகிறது.
சிதம்பரம் நகரத்திற்கு நாள்தோறும் பல்லாயிரக்கனக்கான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதன் காரணமாக, நகர வீதிகள் எப்போதும், கடும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும்.
நடராஜர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மட்டுமின்றி, சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள மாவட்ட மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு, ஆபத்தான நிலையில், ஆம்புலனஸ் மூலம் கொண்டு வரப்படும் நோயாளிகள், போக்குவரத்து நெரிசலில் சிக்கி பாதிப்பது, இன்றும் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் சிதம்பரம், நகருக்குள் செல்லாமல், தில்லையம்மன் ஓடை வழியாக, பஸ் நிலையம் வரை செல்லும் வகையில் வெளி வட்ட பாதை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது.
தொடர்ந்து, சிதம்பரம் பைசல் மஹால் எதிர்ப்புறம் உள்ள துவங்கம், தில்லையம்மன் ஓடை, கான்சாகி ஓடை வழியாக பஸ் நிலையம் பின்புறம் வரை, 2.4 கிலோ மீட்டர் துாரத்திற்கு தடுப்பு சுவருடன் கூடிய, வெளி வட்ட சாலை அமைக்க, முதல் கட்டமாக 42 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதில், பொதுப்பணித்துறை மூலம், முதல் கட்டமாக, இரு பிரிவுகளாக, தடுப்பு சுவர் கட்டும் பணிகள் துவங்கி, கடந்த 7 மாதங்களுக்கு முன்பே முடிவுற்றது.
இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் சிதம்பரம் வருகை தந்த முதல்வர் ஸ்டாலின், வெளிவட்ட சாலை அமைக்க 20 கோடி நிதி ஒதுக்கிடு செய்து, அறிவித்தார்.
தொடர்ந்து, 6 மாதங்களாகியும் இதுவரை சாலை பணி துவங்கவில்லை. இந்த பணிகளில் நெடுஞ்சாலை துறையினர், அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருகின்றனர். இதுவரை 'டெண்டர்' கூட துவங்கவில்லை.
முதல்வர் அறிவித்த திட்டத்திற்கே, இந்த கதி எனில், மற்ற திட்டங்களின் நிலை என்னவாகும் என தெரியவில்லை. அந்த அளவிற்கு நெடுஞ்சாலை துறையினர் படு மோசமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சி தம்பரத்தில் வெளிவட்ட சாலை அமைக்கப்பட்டால், அவசரகால மருத்துவமனைக்கு அழைத்து செல்பவர்களின் உயிர்கள் பாதுகாக்கப்படுவதோடு, எப்போதும் வாகன நெருக்கடியில் சிக்கி தவிக்கும் நகரத்திற்கும் விமோசனம் கிடைக்கும்.
கலெக்டர் போர்க்கால அடிப்படையில் வெளிவட்ட சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே, சிதம்பரம் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

