/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காட்டுமன்னார்கோவில் பகுதி டெல்டாவில் இடைவிடாத மழை
/
காட்டுமன்னார்கோவில் பகுதி டெல்டாவில் இடைவிடாத மழை
ADDED : டிச 12, 2024 07:58 AM
காட்டுமன்னார்கோவில்; காட்டுமன்னார்கோவில் டெல்டா பகுதியில் நேற்று பகல் முழுவதும் இடைவிடாது மழை பெய்ததால் பொதுமக்கள் வீட்டில் முடங்கினர்.
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, காட்டுமன்னார்கோவில் டெல்டா பகுதியில் நேற்று அதிகாலை முதல் சூரைக்காற்றுடன் கூடிய மழை பெய்யத் துவங்கியது.
கடந்த ஒரு வாரம் மழை பொழிவு இல்லாத நிலையில், மீண்டும் பலத்த காற்றுடன் இடைவிடாமல் சாரல் மழை பெய்தது. மழையுடன் குளிர் காற்று வீசுவதால் பொதுமக்கள் வெளியில் வரமுடியாமல் வீட்டில் முடங்கினர். தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கியது.
டெல்டாவில் சம்பா நெல் பயிர்கள் தண்டு உருண்டும், பூ வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்த சமயத்தில் பலத்த மழையும், காற்று வீசினால் நெற்பயிர்கள் பாதிக்கும் நிலை ஏற்படும் என்பதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
அணைக்கரை கீழணையில் நேற்று நீர் மட்டம் 7.5 அடியாக இருந்தது. அணைக்கு 1009 கன அடி நீர் வரத்து உள்ள நிலையில், வடவாற்றில் 305 கன அடி, வடக்கு ராஜன்வாய்க்கால் 303 கன அடி, தெற்கு ராஜன்வாய்க்கால் 301 கன அடி, குமுக்கி மன்னியாறு உள்ளிட்ட வாய்க்கால்களில் 100 கன அடி வீதம் பாசனத்திற்கு திறந்துவிடப்படுகிறது.
வீராணம் ஏரி நிரம்பியுள்ள நிலையில், சென்னை குடிநீருக்கு 74 கன அடி, பாசனத்திற்கு 350 கன அடி வீதம் திறந்து விடப்படுகிறது.