/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரசு சுவர், பாலங்களில் போஸ்டர் ஒட்டுவது அதிகரிப்பு! வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம்
/
அரசு சுவர், பாலங்களில் போஸ்டர் ஒட்டுவது அதிகரிப்பு! வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம்
அரசு சுவர், பாலங்களில் போஸ்டர் ஒட்டுவது அதிகரிப்பு! வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம்
அரசு சுவர், பாலங்களில் போஸ்டர் ஒட்டுவது அதிகரிப்பு! வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம்
ADDED : ஜன 21, 2025 06:53 AM

விருத்தாசலம்: அரசு சுவர்கள், பாலங்கள், கல்வெர்ட்டுகளில் அரசியல் கட்சிகள், தனி நபர்களின் நிகழ்ச்சிகளுக்கு போஸ்டர் ஒட்டுவது அதிகரித்துள்ளதால், வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் உள்ளது.
அரசியல் கட்சி தலைவர்கள் பிறந்தநாள், இரங்கல், நிர்வாகிகள் பதவியேற்பு, போராட்டங்கள் குறித்து போஸ்டர்கள் பொதுமக்கள் பார்வையில் படும்படி ஒட்டுப்படுகிறது. அதுபோல் திருமணம், இரங்கல் உட்பட பல்வேறு நிகழ்வுகளுக்கும் டிஜிட்டல் பேனர்கள் வைப்பதும் கலாசாரமாகிவிட்டது.
சாலையோரம் வைக்கும் ராட்சத பேனர்கள் சரிந்து விழுந்து, பொதுமக்கள், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கியதால், பேனர்களுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் அனுமதிக்கப்பட்ட இடங்களில் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அனுமதி பெற்று, போலீசார் பரிந்துரைக்கும் இடங்களில் பேனர்கள் கட்டப்பட்டன.
நாளடைவில் மாவட்டத்தில் அனுமதியின்றி டிஜிட்டல் பேனர் கட்டும் கலாசாரம் குறையவில்லை.
இதனால், டிஜிட்டல் பேனர்களுக்கு மாற்றாக போஸ்டர்கள் பயன்பாடு அதிகரித்து விட்டது. ராட்சத அளவில் அச்சடிக்கப்படும் போஸ்டர்கள் அரசு சுவர்கள், பாலங்கள், கல்வெர்ட்டுகளில் கண்ணைக் கவரும் வகையில் ஒட்டப்படுகின்றன.
பாலங்கள், கல்வெர்ட்டுகளில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வாகன ஓட்டிகள் நலன் கருதி போக்குவரத்து விதிமுறைகள் அடங்கிய விழிப்புணர்வு சிக்னல்கள் வரையப்பட்டிருக்கும்.
இவற்றின் மீது அரசியல் கட்சியினர், தனியார் நிறுவன விளம்பரங்கள், ரியல் எஸ்டேட் விற்பனை குறித்து விளம்பர போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் விளம்பரங்களை பார்த்தபடி செல்வதால், கவனக்குறைவாக எதிரே வரும் வாகனங்களில் சிக்கி, விபத்து ஏற்படுகிறது. பாலத்தின் சுவர்களில் மோதி காயமடைகின்றனர்.
விருத்தாசலம் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அரசு சுவர்கள், பாலங்கள், கல்வெர்ட்டுகளில் ஒட்டப்பட்ட போஸ்டர்களை நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் அகற்றி, போஸ்டர் ஒட்டிய நபர்கள் மீது சம்பந்தப்பட்ட அரசுத்துறை அதிகாரிகள் மூலம் புகார் தெரிவித்து, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
காலப்போக்கில் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் விட்டதால், மாவட்டம் முழுவதும் அரசு அலுவலக சுவர்கள், பாலங்களில் சுவரொட்டிகள் பயன்பாடு அதிகரித்து விட்டது. எனவே, அரசு சுவர்கள், பாலங்கள், கல்வெர்ட்டுகளில் ஒட்டியுள்ள போஸ்டர்களை அப்புறப்படுத்தி, விதிமீறுவோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.