/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
துணை முதல்வர் துறைக்கு வந்த சோதனை
/
துணை முதல்வர் துறைக்கு வந்த சோதனை
ADDED : நவ 28, 2024 06:59 AM

பெண்ணாடம்:கிராமப்புற இளைஞர்களுக்கு விளையாட்டுத்துறையில் ஆர்வத்தை ஏற்படுத்த, அனைத்து ஊராட்சிகளிலும் விளையாட்டு மைதானங்களை அமைக்க கடந்த 2019ல் அப்போதைய அ.தி.மு.க., அரசு முடிவு செய்தது.
அதன்படி கடலுார் மாவட்டத்தில் உள்ள 683 ஊராட்சிகளில் தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட தொழிலாளர்களை பயன்படுத்தி அம்மா இளைஞர் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டது.
அவ்வாறு நல்லுார் ஒன்றிய ஊராட்சிகளில் அமைக்கப்பட்ட விளையாட்டு மைதானம் சரிவர பராமரிக்காததால் செடி, கொடிகள், சீமைகருவேல மரங்கள் மண்டி பாழானது. இந்நிலையில், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, உத்தரவின்பேரில் ஊராட்சி விளையாட்டு மைதானங்கள் சீரமைக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, நல்லுார் ஒன்றிய ஊராட்சிகளில் புதர் மண்டிய கபடி, வாலிபால், டென்னிஸ் மைதானத்தை புனரமைக்க, தேர்வு செய்த ஊராட்சிகளுக்கு ஊரக வேலை உறுதித்திட்டத்தில் ஒரு லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
பெண்ணாடம் அடுத்த பாசிக்குளம் ஊராட்சியில் கபடி, வாலிபால், டென்னிஸ் மைதானம் அமைக்கும் பணி கடந்தவாரம் மழையின்போது நடந்தது.
அதில், லேசான பள்ளம் தோண்டி, அதில் செம்மண் கலவையை கொட்டி, செங்கல் வைத்து அதன் மேல் சிமெண்ட் பூசினர். இதையறிந்த இளைஞர்கள் தரமாக அமைக்குமாறு கூறினர். ஆனால் இப்படிதான் கட்ட முடியும் என அவர்கள் தெரிவித்தனர்.
அதிருப்தியடைந்த இளைஞர்கள் துணை முதல்வரின் துறைக்கு வந்த சோதனை என வேதனை தெரிவித்துள்ளனர். தற்போது மைதானமும் சேதமடைந்துள்ளது.
விளையாடாமல் நிதி மட்டுமே வீணாவதாக தெரிவித்த இளைஞர்கள், மைதானத்தை கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.