கடலுார் சில்வர் பீச்சிற்கு சர்வதேச நீலக்கொடி அங்கீகாரம்: அடிப்படை வசதிகளுக்கு கிடைத்த நற்சான்று
கடலுார் சில்வர் பீச்சிற்கு சர்வதேச நீலக்கொடி அங்கீகாரம்: அடிப்படை வசதிகளுக்கு கிடைத்த நற்சான்று
ADDED : நவ 13, 2026 10:03 PM

கடலுார்: கடலுார் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சிற்கு 2026–2027 ம் ஆண்டிற்கான சர்வதேச நீலக்கொடி அங்கீகாரம் கிடைத்துள்ளது.
கடலுார் மாவட்டத்தின் சுற்றுலா வளர்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கடலோர மேலாண்மையில் ஒரு முக்கிய மைல் கல்லாக, தேவனாம்பட்டினத்தில் அமைந்துள்ள ‘சில்வர் பீச்’ 2026–2027 ம் ஆண்டிற்கான சர்வதேச நீலக்கொடி அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. இதற்கான அங்கீகாரச் சான்றிதழ் நேற்று முன்தினம் பெறப்பட்டுள்ளது. கலெக்டரின் வழிகாட்டுதலின்படி கடலுார் மாநகராட்சி கமிஷனர் கிஷன்குமார் ஒருங்கிணைப்பிலும், கடலுார் மாநகராட்சியால் வெள்ளி கடற்கரையில் பல்வேறு உட்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் மற்றும் கடற்கரைகளின் சுற்றுச்சூழல் தரம், கடல் நீரின் தரம், துாய்மை, பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை ஆகியவற்றின் அடிப்படையில் கொண்டு, டென்மார்க் நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் கல்வி அறக்கட்டளையின் சார்பில் நீலக்கொடி அங்கீகாரம் வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் 2026–2027 ம் ஆண்டிற்கான புதிய சர்வதேச நீலக்கொடி அங்கீகாரத்தைப் பெற்றுள்ள மூன்று கடற்கரைகளில் கடலுார் ‘சில்வர் பீச்’ ஒன்றாகும். இக்கடற்கரையின் மொத்த நீளமான 1 கி.மீட்டரில், 500 மீட்டர் பகுதி சர்வதேச நீலக்கொடி தரநிலைகளுக்கு ஏற்ப கடலுார் மாநகராட்சியால் மேம்படுத்தப்பட்டுள்ளது. என்.சி.எஸ்.சி.எம்., மூலம் 5 இடங்களில் கடல் நீரின் தரம் பரிசோதிக்கப்படுகிறது. நாள்தோறும் 2 முறை துாய்மைப் பணிகள், நவீன கடற்கரை துாய்மைப்படுத்தும் இயந்திரம் பயன்பாடு மற்றும் மக்கும், மக்காத கழிவுகள் தனித்தனியாகச் சேகரிக்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
உயிரி கழிப்பறைகள், ஆர்.ஓ., குடிநீர் வசதி மற்றும் சுத்திகரிக்கப்பட்ட நீரை மறுபயன்படுத்தும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. உயிர்காப்பாளர்கள், முதலுதவி, மீட்பு உபகரணங்கள், சி.சி.டி.வி., கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் பொது அறிவிப்பு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வுதளப் பாதைகள், பிரத்யேக கழிப்பறைகள் மற்றும் வாகன நிறுத்துமிட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கடற்கரை உயிரினங்கள், தாவரங்கள் மற்றும் கடல் ஆமைகள் குறித்த விழிப்புணர்வுப் பலகைகள் மற்றும் கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும், கலெக்டர் தலைமையிலான கடற்கரை மேலாண்மைக் குழு மூலம் தொடர்புடைய அரசுத் துறைகளுடன் இணைந்து கடற்கரையின் பராமரிப்பு மற்றும் மேலாண்மைப் பணிகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன.
இந்தச் சாதனையானது, கடலுார் மாநகராட்சியின் சிறப்பான செயல்பாடு, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையின் சார்பில் மாவட்ட நிர்வாகத்துடன் பணிகளை ஒருங்கிணைத்த பசுமைத் தோழர், தொடர்புடைய அரசுத் துறைகளின் ஒருங்கிணைந்த முயற்சிக்கும், பொதுமக்களின் ஒத்துழைப்பு கிடைத்த வெற்றியாகும். இச்சர்வதேச அங்கீகாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான சுற்றுலா வளர்ச்சியில் மேலும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
