/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வழக்கு வாகனங்களுக்கு 'கியூஆர்' கோடு அறிமுகம்! சிதம்பரம் நகர போலீசார் அசத்தல்
/
வழக்கு வாகனங்களுக்கு 'கியூஆர்' கோடு அறிமுகம்! சிதம்பரம் நகர போலீசார் அசத்தல்
வழக்கு வாகனங்களுக்கு 'கியூஆர்' கோடு அறிமுகம்! சிதம்பரம் நகர போலீசார் அசத்தல்
வழக்கு வாகனங்களுக்கு 'கியூஆர்' கோடு அறிமுகம்! சிதம்பரம் நகர போலீசார் அசத்தல்
ADDED : ஏப் 27, 2024 04:32 AM

சிதம்பரம்: பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள வாகனங்களை, சுலபமாக அடையாளம் காணும் வகையில், சிதம்பரம் போலீசார் 'கியூஆர்' கோடு சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
தமிழகம் முழுதும் பல்வேறு வழக்குகள் மற்றும் விபத்துகளில் சிக்கும் வாகனங்கள், நீதிமன்றம் அல்லது அந்தந்த சரக காவல் நிலையங்களில், வழக்கு முடியும் வரை நிறுத்தப்படுவது வழக்கம்.
இந்த வாகனங்கள் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் வாகன உரிமையாளருக்கே அடையாளம் தெரியாமல் போவது உண்டு.
குறிப்பாக, தற்போது குடிபோதையில், வாகனம் ஓட்டுபவர்களிடம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. கோர்ட்டில் அபராதம் கட்டினால் மட்டுமே வாகனங்களை மீட்க முடியும். 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதித்தால் பலர் அபராத தொகையை கட்ட முடியாமல் வாகனங்களை மீட்க வருவதில்லை.
இதனால் பல்வேறு வழக்குகள், விபத்துகள் மூலம் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் மட்டுமின்றி குடி போதையில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களும் காவல் நிலையங்களில் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில், சிதம்பரம் நகர காவல் நிலைய, உள் வளாகத்தைச் சுற்றி 300க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விபத்து, கொலை, கொள்ளை, கடத்தல், வழிப்பறி, திருட்டு, மது போதையில் ஓட்டிய வழக்கு உட்பட பல குற்ற வழக்குகளில் சிக்கி, பறிமுதல் செய்யப்பட்ட இந்த வாகனங்கள் திறந்த வெளியில் நிறுத்தப்பட்டு வீணாகி வருகிறது.
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் குறித்து கோர்ட்டில் ஆண்டு கணக்கில் வழக்கு நடைபெற்று வருகிறது. இதனால், எந்தெந்த குற்ற வழக்குகளில், வாகனங்கள் பிடிபட்டது என கண்டுபிடிக்க முடியாத நிலை, போலீசாருக்கே ஏற்படுகிறது.
அதற்கு தீர்வு காணும் வகையில் சிதம்பரம் நகர இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், சப் இன்ஸ்பெக்டர் பரணிதரன் ஆகியோர் வழக்கு தொடர்பான வாகனங்களை தரம் பிரித்து 'கியூஆர்' கோடு ஒட்டும் புதிய முறையை கையாண்டுள்ளனர்.
இனி, 'க்யூஆர்'கோடு பதிவு செய்து அதனை ஸ்கேன் செய்தாலே பறிமுதல் செய்யப்பட்ட வாகனம் எந்த தேதியில், எங்கு, யாரால், எந்த வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டது என கண்டுபிடித்து விடலாம்.
இது வழக்கு விசாரணையின்போது, நீதிமன்றத்தில் ஒப்படைக்க வசதியாக இருக்கும். சிதம்பரம் போலீசாரின் 'கியூஆர்' கோடு முயற்சி, மாநில அளவில், அதிகாரிகள் மற்றும் போலீசார் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது.

