ADDED : நவ 06, 2025 05:42 AM

கடலுார்: இரிடியம் மோசடியில் ஈடுபட்ட விழுப்புரத்தை சேர்ந்த வாலிபரை, கடலுார் சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், பண்ருட்டி பகுதியை சேர்ந்த பெண் உள்ளிட்ட 20 பேர் கடந்த மாதம், கடலுார் சி.பி.சி.ஐ.டி., போலீசாரிடம் புகார் அளித்தனர். அதில், 'விழுப்புரம் மாவட்டம், திருவாமூரை சேர்ந்த சதீஷ்குமார்,35, என்பவர் சில ஆண்டுகளுக்கு முன், அறிமுகம் ஆனார். அவர், இரிடியத்தில் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால், 3 மாதத்தில் ஒரு கோடி ரூபாய் தரப்படும் என தெரிவித்தார்.
அதை நம்பி, மகளிர் சுயஉதவிக்குழு, உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் கடன் வாங்கி மொத்தம் 80 லட்ச ரூபாய் கொடுத்தோம். பணத்தை பெற்றுக்கொண்ட சதீஷ்குமார், கூறிய படி பணம் தரவில்லை, நாங்கள் கொடுத்த பணத்தையும் திருப்பித்தரவில்லை,' என புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர்.
நேற்று சதீஷ்குமாரை கைது செய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் சில ஆண்டுகளுக்கு முன்பு, கோவையில் பணிபுரிந்து வந்த சதீஷ்குமாருக்கு இரிடியம் விற்பனை மோசடி கும்பலுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. பொதுமக்களிடம் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தால், ஒரு கோடி தருவதாக கூறி பணத்தை வசூல் செய்வதற்காக கடலுார், விழுப்புரம் மாவட்டத்திற்கு மோசடி கும்பலின் ஏஜண்டாக செயல்பட்டு வந்தது தெரிந்தது.
சதீஷ்குமாருடன் சேர்ந்து மோசடியில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பது குறித்து சி.பி.சி.ஐ.டி.,போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

