விருதை - ராமநத்தம் 4 வழி சாலை பணிகள்... ஜரூர்!:விரைந்து முடிக்க வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
விருதை - ராமநத்தம் 4 வழி சாலை பணிகள்... ஜரூர்!:விரைந்து முடிக்க வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
UPDATED : செப் 17, 2026 05:33 AM
ADDED : செப் 16, 2026 07:44 PM

திட்டக்குடி, செப். 17-
விருத்தாசலம் - ராமநத்தம் நான்கு வழி சாலை பணிகள் ஜரூராக நடந்து வருகிறது. இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
மாவட்டத்தில் விருத்தாசலம் - ராமநத்தம் பிரதான நெடுஞ்சாலையாக உள்ளது. இவ்வழியே திருச்சி, கடலுார், சென்னை, மதுரை, கோயம்புத்துார், புதுச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு ஏராளமான இலகுரக மற்றும் கனரக வாகனங்கள் செல்கின்றன. இச்சாலையில் குறுகிய பாலங்கள், வளைவு சாலைகளால், விருத்தாசலம் - ராமநத்தம் வரையிலான 42 கி.மீ., துாரத்தை கடக்க ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலானது.
திருச்சி - கடலுார், திட்டக்குடி - சென்னை, திட்டக்குடி - சிதம்பரம் பகுதிகளுக்கான பயண நேரம் அதிகமானதோடு, வாகன விபத்துகளும் அதிகரித்து வந்தன. இச்சாலையில் சந்திக்கும் கடலுார் - விருத்தாசலம் - சேலம் தேசிய நெடுஞ்சாலையாக அகலப்படுத்தப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.
இதேபோன்று, விருத்தாசலம் - உளுந்துார்பேட்டை சாலையும் அகலப்படுத்தப்பட்டுள்ளது. குறுகிய சாலையாக இருந்த விருத்தாசலம் - ராமநத்தம் சாலை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் ரூ. 49 கோடியில் 7 மீட்டர் அகலத்திற்கு விரிவுபடுத்தப்பட்டது. ஆனால் விபத்துகள் குறைந்தபாடில்லை.
விபத்துகள் மற்றும் போக்குவரத்து பாதிப்புகளை தடுக்க விருத்தாசலம் - ராமநத்தம் (தொழுதுார்) சாலையை நான்கு வழி சாலையாக தரம் உயர்த்த வேண்டும் என வாகன ஓட்டிகள், பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதையேற்று, கடந்த தி.மு.க., ஆட்சியில் விருத்தாசலம் - ராமநத்தம் சாலையை நான்குவழி சாலையாக தரம் உயர்த்தப்படும் என முன்னாள் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இதற்காக முதல்வரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ. 150 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகளும் துவங்கியது. அதில், முதற்கட்டமாக திட்டக்குடி முதல் அரங்கூர் வரை ரூ. 70 கோடியில் 10 கிலோ மீட்டர் துாரத்திற்கு சாலை விரிவாக்க பணிகள் துவங்கி, பணிகளை நிறைவடையும் நிலையில் உள்ளது.
இரண்டாம் கட்ட பணிகளாக கருவேப்பிலங்குறிச்சி முதல் திட்டக்குடி வரை ரூ. 80 கோடியில் நான்கு வழி சாலை பணிகள், கடந்த 5 மாதங்களுக்கு முன் துவங்கியது. அதில், நந்தப்பாடி, பெண்ணாடம், இறையூர், ஆவினங்குடி பகுதிகளில் சாலையோர மரங்கள், மின்கம்பங்கள், கடைகள், குடியிருப்புகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறையினர் பொக்லைன் மூலம் அகற்றி, நான்குவழி சாலை விரிவாக்க பணிகள் ஜரூராக நடந்து வருகிறது.
இப்பணிகள் ஜரூராக நடப்பதால் திட்டக்குடி, ஆவினங்குடி, பெண்ணாடம் பகுதிகளில் போக்குவரத்து பாதிப்புகள் மற்றும் விபத்துகள் குறைய வாய்ப்புள்ளதாகவும், பயண நேரம் குறையும் என்பதால் பொது மக்கள், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
