ADDED : செப் 16, 2026 07:43 PM
கடலுார், செப். 17–
கடலுாரில் விநாயகர் சிலை விஜர்சனத்தின் போது, முதியவர் ஒருவர் ஞாபக மறதியாக விநாயகர் சிலையுடன் உப்பனாற்றில் வீசிய ஒன்னரை சவரன் செயினை தீயணைப்பு துறையினர் தேடிவருகின்றனர்.
நாடு முழுவதும் கடந்த 14ம் தேதி விநாயகர் சதுார்த்தி விழா கொண்டாடப்பட்டது. அதனையொட்டி வீடுகளில் பிரதிஷ்டை செய்து பூஜை செய்த விநாயகர் சிலைகள் மூன்றாம் நாளான நேற்று நீர் நிலைகளில் விஜர்சனம் செய்யப்பட்டது.
அதன்படி கடலுார் நகர மக்கள் பலர் விநாயகர் சிலைகளை தேவணாம்பட்டினம் உப்பனாற்றில் அருகில் வைத்து பூஜை செய்து, பின்னர் ஆற்றில் கரைத்தனர். அவ்வாறு முதியவர் ஒருவர் தான் கொண்டு வந்த விநாயகர் சிலையை உப்பனாற்றில் வீசினார். சற்ற நேரம் கழித்து, சிலைக்கு ஒன்றரை சவரன் தங்க செயின் அணிவித்திருந்தது நினைவுக்கு வந்ததும், அவர் குய்யோ முறையோ என அலறினார்.
உடன் அங்கிருந்த போலீசார் முதியவரிடம் விசாரித்து விட்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், தீயணைப்பு வீரர்கள் உப்பனாற்றில் இறங்கி, விநாயகர் சிலையுடன் வீசப்பட்ட தங்க செயினை தீவிரமாக தேடினர்.
