sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஓராண்டுக்கு பின் கூட்டுக்குடிநீர் திட்டப் பணி தீவிரம்! வடலூர், குறிஞ்சிப்பாடியில் இம்மாதம் முடியும்

/

ஓராண்டுக்கு பின் கூட்டுக்குடிநீர் திட்டப் பணி தீவிரம்! வடலூர், குறிஞ்சிப்பாடியில் இம்மாதம் முடியும்

ஓராண்டுக்கு பின் கூட்டுக்குடிநீர் திட்டப் பணி தீவிரம்! வடலூர், குறிஞ்சிப்பாடியில் இம்மாதம் முடியும்

ஓராண்டுக்கு பின் கூட்டுக்குடிநீர் திட்டப் பணி தீவிரம்! வடலூர், குறிஞ்சிப்பாடியில் இம்மாதம் முடியும்


ADDED : பிப் 10, 2024 06:00 AM

Google News

ADDED : பிப் 10, 2024 06:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : மாவட்டத்தில் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் கூட்டுக்குடிநீர் திட்டப் பணி ஓராண்டுக்குப் பின் தீவிரமடைந்துள்ள நிலையில், வடலுார், குறிஞ்சிப்பாடி பகுதிகளில் குடிநீர் திட்டப்பணிகள் இம்மாதம் முடிவடையும் என எதிர்பாக்கப்படுகிறது.

கடலுார் மாவட்டம் தென்பெண்ணை, கெடிலம், மணிமுக்தா, வெள்ளாறு, கொள்ளிடம், பரவனாறு போன்ற ஆறுகளையும், வீராணம், பெருமாள், வெலிங்டன், வாலாஜா போன்ற ஏரிகளையும் உள்ளடக்கியது. சுற்றியுள்ள 10 மாவட்டங்களுக்கு வடிகாலாக இருந்த நிலையில், ஆற்று மணலை அளவுக்கு அதிகமாக அள்ளியது,

மழைநீரை சேமிக்காதது, நீர்நிலைகள் துார்வாராதது, நிலத்தடி நீரை அளவுக்கு அதிகமாக உறிஞ்சியது போன்ற காரணங்களால், நீர்மட்டம் ஆண்டுதோறும் சரிந்தது.

மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்ப, குடிநீர் தேவைகள் செய்து தரப்படவில்லை. இதனால் கோடை காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, பொது மக்கள் வயல்வெளிகளில் உள்ள மோட்டார்களுக்கு காலி குடங்களுடன் அலையும் அவலம் தொடர்கிறது.

மாவட்டத்தில் உள்ள 683 ஊராட்சிகள், 14 ஊராட்சி ஒன்றியங்கள் மூலம் 3,500க்கும் அதிகமான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், சிறு மின்விசை பம்புகள் பயன்பாட்டில் இருந்தும் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க முடியாத நிலை உள்ளது.

அதன்படி, 2019, ஜூலை 3ல், நெய்வேலி என்.எல்.சி., இந்தியா நிறுவன சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் நீரை கொண்டு திட்டக்குடி, வடலுார் நகராட்சிகள், பெண்ணாடம், மங்கலம்பேட்டை, குறிஞ்சிப்பாடி, கங்கைகொண்டான் பேரூராட்சிகள் மற்றும் விருத்தாசலம், மங்களூர், நல்லுார் ஒன்றியங்களை சேர்ந்த 625 ஊரக குடியிருப்புகளுக்கு கூட்டுக்குடிநீர் திட்டம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

கடந்த 2020, டிசம்பர் 21ல் துவங்கிய பணிகள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் நான்கு பகுதிகளாக பிரித்து, நபார்டு வங்கி மற்றும் குறைந்தபட்ச சேவை திட்டம் (எம்.என்.பி.,) நிதியுதவியின் கீழ் தீவிரமாக நடந்தது.

20 லட்சம் பேர் பயன்


இதன் மூலம் சுமார் 20 லட்சம் பேருக்கு தினசரி தேவையான குடிநீர் 94.61 மில்லியன் லிட்டர் வழங்கப்படும். இதற்காக, என்.எல்.சி., இரண்டாவது சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரை 400 மி.மீ., விட்டமுள்ள இரும்பு குழாய்கள் மூலம் 8.20 கி.மீ., தொலைவிற்கு கீழ்வளையமாதேவி கிராமத்தில் 31.26 மில்லியன் லிட்டர் கொள்ளளவு உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு எடுத்துச் சென்று, அதிநவீன தொழில்நுட்பத்தில் சுத்திகரிக்கப்பட உள்ளது.

4 பூஸ்டர் தொட்டிகள்


அங்கு 22.00 லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள நீர் சேகரிப்பு தொட்டியில் குடிநீர் சேகரிக்கப்பட்டு, வெவ்வேறு குதிரைத்திறன் கொண்ட மின் மோட்டர்கள் மூலம் விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை, பெண்ணாடம் அடுத்த கொத்தட்டை, திட்டக்குடி அடுத்த கொட்டாரம், ராமநத்தம் அடுத்த ஆவட்டி ஆகிய நான்கு பூஸ்டர் நீர் சேகரிப்பு தொட்டிகள், பொது நீர் சேகரிப்பு தொட்டிகள் மற்றும் ஊராட்சி அளவிலான நீர் சேகரிப்பு தொட்டிகளில் சேகரிக்கப்படும்.

இங்கிருந்து ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள 789 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு நீர் ஏற்றப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. திட்டக்குடி, வடலுார் நகராட்சிகள், பெண்ணாடம், மங்கலம்பேட்டை, குறிஞ்சிப்பாடி, கங்கைகொண்டான் பேரூராட்சிகளில் நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 50 லிட்டரும், ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் 85 லிட்டரை கணக்கிட்டு, கூடுதலாக 135 லிட்டர் தண்ணீர் வழங்கப்பட உள்ளது.

அதுபோல், விருத்தாசலம், மங்களூர், நல்லுார் ஒன்றியங்களை சேர்ந்த 625 கிராம குடியிருப்புகளுக்கு நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 35 லிட்டரும், ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் 20 லிட்டரையும் கணக்கிட்டு, 55 லிட்டர் என்ற முறையில் தண்ணீர் வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில், 2022, ஆகஸ்டு மாதத்தில் பயன்பாட்டிற்கு வரும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இதுநாள் வரை பணிகள் முழுமை பெறவில்லை. இதனால் கோடைகாலம் துவங்கிய நிலையில், பொது மக்கள் தண்ணீர் தட்டுப்பாடு தீராமல் கடும் அவதியடைந்து வருகின்றனர். பேரிடரை சந்தித்து வரும் மாவட்டத்தில் குடிநீர் திட்டத்திற்கு நிதி ஒதுக்கியும், பணிகள் முடியாதது பொது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக வேகமெடுத்த பணிகள், சாலையோரம் ராட்சத குழாய்கள் பதித்தல், மணிமுக்தாறு மற்றும் நீர்நிலைகளில் குழாய்களை தாங்கும் பாலம் கட்டுதல் என வேகமெடுத்துள்ளது. இதனால் ஓரிரு மாதங்களில் தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்கும் என பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு குடிநீர் வழங்கல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'நிர்வாக காரணங்களால் பணியில் தொய்வு ஏற்பட்டது. தற்போது தீவிரமாக நடந்து வரும் நிலையில், வடலுார் நகராட்சி மற்றும் குறிஞ்சிப்பாடி பேரூராட்சியில் இம்மாதம் பணிகள் முழுவதுமாக முடிவடைகிறது. திட்டக்குடி நகராட்சி மற்றும் இதர பேரூராட்சி பகுதிகள், விருத்தாசலம், மங்களூர், நல்லுார் ஒன்றிய ஊராட்சிகளில் இரண்டு மாதங்களுக்குள் முடிவடைந்து விடும்' என்றார்.






      Dinamalar
      Follow us