/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கிள்ளை பட்டினவர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டுரை;
/
கிள்ளை பட்டினவர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டுரை;
கிள்ளை பட்டினவர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டுரை;
கிள்ளை பட்டினவர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டுரை;
ADDED : ஜூன் 14, 2025 02:43 AM

கிள்ளை பட்டினவர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டுரை;--
பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட பிச்சாவரம் சுற்றுலா மையம் அருகே அமைந்துள்ளது கிள்ளை பட்டினவர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகும். இப்பள்ளி கடந்த 1922ம் ஆண்டு நவம்பர் மாதம் 11ம் தேதி துவக்கப் பள்ளியாக துவங்கப்பட்டது.
முடசல் ஓடை கிராமம் முதல், சீர்காழி பழையாறு வரை, கடற்கரையோர மீனவ கிராமங்களின் தாய் பள்ளியாக தற்போது வரை செயல்பட்டு 104ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
இப்பள்ளியில் பலர் பயின்றாலும், இப்பள்ளியிலேயே பயின்று, இப்பள்ளிக்கே தலைமை ஆசிரியர்களாக தங்கராஜ், வீரபாண்டியன் ஆகியோர் பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 2012ம் ஆண்டு முதல் தலைமை ஆசிரியராக வேதரத்தினம் பணிபுரிந்து வருகிறார்.
மூன்று பட்டதாரி ஆசிரியர்கள், மூன்று இடைநிலை ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். கடந்த 2005ம் ஆண்டு நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இங்கு, படித்த 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் நல்ல நிலையில் உள்ளனர்.
இங்கு படித்த முன்னாள் மாணவர்கள், பொறியாளர், நீதித்துறை மற்றும் பல்வேறு அரசு துறைகளில் பல முக்கிய பொறுப்புகளை வகித்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர் கலைமணி இப்பள்ளியில் பயின்றுள்ளார். பள்ளி வளாகம் முழுதும் 140க்கும் மேற்பட்ட மரங்கள் வளர்க்கப்பட்டு இயற்கை சூழலுடன் பள்ளி அமைந்துள்ளது.
கிள்ளை, சின்ன வாய்க்கால், பட்டறையடி, பில்லுமேடு ஆகிய கிராமங்களில் இருந்து 138 மாணவர்கள் படிக்கின்றனர். காற்றோட்டமான வகுப்பறை, நவீன கரும்பலகை, 27 கணினி வசதியுடன் கணித ஆய்வகம், ஹைடெக் லேப், குடிநீர் என, அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய பள்ளியாக உள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு மாவட்டத்தின் சிறந்த பள்ளிக்கான விருது, 2017ம் ஆண்டு துாய்மை பள்ளிக்கான விருது கிடைத்துள்ளது. 2015ம் ஆண்டு தலைமை ஆசிரியர் வேதரத்தினத்திற்கு, டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது கிடைத்தது.
இவர், கடலூர் மாவட்ட ஊர்காவல் படையில் கோட்ட தளபதியாக பதவி வகிக்கிறார். இவரின் சேவையை பாராட்டி மத்திய உள்துறை அமைச்சரகத்தின் குடிமைப் பாதுகாப்பு மற்றும் ஊர்க்காவல் படையில் வெண்கலப் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்., மாதம் பள்ளியில் நுாற்றாண்டு விழா கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடந்தது. விழாவில், பள்ளி வளாகத்தில், திருவள்ளுவர் சிலை திறந்து வைக்கப்பட்டது. கிராம பொதுமக்கள் சார்பில், பள்ளிக்கு ரூ.2 லட்சம் மதிப்பில் கல்வி உபகரணங்கள் சீர்வரிசை பொருட்களாக வழங்கப்பட்டது.
இப்பள்ளியை தமிழக அரசின் மாதிரி நடுநிலைப்பள்ளியாக தேர்வு செய்து, எல்.கே.ஜி., மற்றும் யூ.கே.ஜி., துவங்கி, பள்ளி பெயருடன் உள்ள பட்டினவர் என்ற ஜாதி பெயரை நீக்க வேண்டும் எனவும், நுாற்றாண்டு பள்ளி கட்டடத்தை சமூக பொறுப்புணர்வு நிதி மூலம் புனரமைப்பு செய்ய வேண்டும் எனவும், பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.