/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தனியார் பள்ளிகளுக்கு இணையாக சிறந்த கட்டமைப்பு வசதி கொடுக்கன்பாளையம் ஊராட்சி பள்ளி அசத்தல்
/
தனியார் பள்ளிகளுக்கு இணையாக சிறந்த கட்டமைப்பு வசதி கொடுக்கன்பாளையம் ஊராட்சி பள்ளி அசத்தல்
தனியார் பள்ளிகளுக்கு இணையாக சிறந்த கட்டமைப்பு வசதி கொடுக்கன்பாளையம் ஊராட்சி பள்ளி அசத்தல்
தனியார் பள்ளிகளுக்கு இணையாக சிறந்த கட்டமைப்பு வசதி கொடுக்கன்பாளையம் ஊராட்சி பள்ளி அசத்தல்
ADDED : செப் 27, 2025 11:45 PM

நடுவீரப்பட்டு அடுத்த கொடுக்கன்பாளையம் ஊராட்சியில் கடந்த 1950ம் ஆண்டு அரசு துவக்கப் பள்ளி துவங்கப்பட்டது. இங்கு, ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை 2 ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிந்தனர்.
பொதுமக்கள், ஊராட்சி தலைவர், ஆசிரியர்களின் கூட்டு முயற்சியால் 2007ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
2014-15ம் கல்வியாண்டில் பள்ளியில் மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 90 ஆக இருந்தது. அதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் தலைமை ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியர்களின் முயற்சியால் தற்போது 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
பெற்றோர் தங்களின் 5வயதுக்குட்பட்ட குழந்தைகளை, மழலையர் வகுப்பில் சேர்க்க விரும்பினர். இதன் காரணமாக பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் குழுவினர், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், கல்வி ஆர்வலர்களின் முயற்சியால் 2015-16ம் கல்வி ஆண்டு முதல் மழலையர் கல்வி வகுப்புகள் மற்றும் ஆங்கில வழிக்கல்வி துவங்கப்பட்டது. கடலுார் ஒன்றியத்திலேயே ஆங்கில வழிக்கல்வியில் சிறந்து விளங்கும் பள்ளியாக திகழ்கிறது.
பள்ளி பெற்ற விருதுகள் இப்பள்ளிக்கு 2016-17ம் கலெக்டர் மூலமாக துாய்மைப்பள்ளி விருது வழங்கப்பட்டது. 2018-19ம் கல்வியாண்டில் சிறந்த பள்ளிக்கான விருது, சமக்ரா திட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் வழங்கப்பட்டது.
2019--20ம் கல்வி ஆண்டில் சிறந்த பள்ளிக்கான விருது வழங்கப்பட்டது. 2022ம் ஆண்டில் சுகாதாரத் துறை சார்பில் புகையிலை இல்லா வளாகப் பள்ளிக்கான மாநில அளவிலான விருதை, அமைச்சர் சுப்ரமணியன் வழங்கினார்.
மாணவர்கள் சாதனைகள் மாணவி கனிஷ்கா 2023ம் ஆண்டு மத்திய எரிசக்தி அமைச்சகம் மூலம் சென்னையில் நடந்த மாநில அளவிலான ஓவியப் போட்டியில் 30 ஆயிரம் ரூபாய் பரிசு வென்றார். பின், டில்லியில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தார்.
8ம் வகுப்பு மாணவர் ஹரிகுமார், 6ம் வகுப்பு மாணவி ஹரிணி ஆகியோர் கராத்தே, சிலம்பம் போட்டிகளில் மாநிலம் மற்றும் தேசிய போட்டிகளில் பரிசுகள் குவித்தனர். 2024-25ம் கல்வி ஆண்டில் மாணவி புவனேஸ்வரி, மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டியில் முதல் பரிசு பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றார்.
2019ம் ஆண்டு மாணவர்கள் சரண், பாரதிதாசன், தினேஷ் ஆகியோர் சிறந்த அறிவியல் படைப்பிற்கான இன்ஸ்பயர் விருது பெற்றனர். 2017ம் ஆண்டில் மாநில அளவில் மாணவர் வசந்தகுமார் இம்பார்ட் தேர்வில் முதலிடம் பிடித்தார்.