/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெருமாள் ஏரி பகுதியில் குறுவை நெல் சாகுபடி துவக்கம்: கோடை மழை பெய்வதால் விவசாயிகள் ஆர்வம்
/
பெருமாள் ஏரி பகுதியில் குறுவை நெல் சாகுபடி துவக்கம்: கோடை மழை பெய்வதால் விவசாயிகள் ஆர்வம்
பெருமாள் ஏரி பகுதியில் குறுவை நெல் சாகுபடி துவக்கம்: கோடை மழை பெய்வதால் விவசாயிகள் ஆர்வம்
பெருமாள் ஏரி பகுதியில் குறுவை நெல் சாகுபடி துவக்கம்: கோடை மழை பெய்வதால் விவசாயிகள் ஆர்வம்
UPDATED : ஜூன் 13, 2025 04:13 AM
ADDED : ஜூன் 13, 2025 03:43 AM

புதுச்சத்திரம்: கடலுார் மாவட்டத்தில் கோடை மழை அடிக்கடி பெய்து வருவதால் பெருமாள் ஏரி பாசன பகுதி விவசாயிகள் குறுவை பட்ட நெல் சாகுபடி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
நடப்பு ஆண்டு அடிக்கடி மழை பொழிவு இருக்கிறது. இதுபோன்ற பருவம் தவறிய மழையினால் காய்கறி பயிர்கள் சிறப்பான விளைச்சலை தராது. அதில் நெல் சாகுபடி மட்டுமே மழையில் செழித்து வளரக்கூடியது.
எனவே விவசாயிகள் மற்ற பயிர்களை சாகுபடி செய்வதற்கு பதில் நெல் நடவே சிறந்தது என கருதுகின்றனர். ஜூன், ஜூலை மாதங்களில் துவங்கும் குறுவை பட்டம் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் முடிகிறது.
இந்த பட்டத்தில் 120 நாட்களுக்கு குறைவான வயது கொண்ட நெல் ரகங்கள் பயிரிடப்படுகின்றன. புதுச்சத்திரம் மற்றும் தானுார், சம்பாரெட்டிபாளையம், கருவேப்பம்பாடி, சிறுபாலையூர், மேட்டுப்பாளையம், மேல் பூவாணிக்குப்பம், கீழ் பூவாணிக்குப்பம், ஆலப்பாக்கம், பள்ளிநீரோடை, கம்பளிமேடு, கல்லுக்கடைமேடு, பெரியப்பட்டு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் 3,000 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களில் பெருமாள் ஏரி பாசனம் மூலம் விவசாயம் செய்து வருகின்றனர்.
இப்பகுதி விவசாயிகள் குறுவை பட்டத்திற்கு ஆண்டுதோறும் நெல் பயிரிட்டு வருகின்றனர். மற்ற பகுதிகளில் புழுதியில் நேரடி நெல் விதைப்பு செய்வர். ஆனால் இப்பகுதி விவசாயிகள் சேடை உழவு செய்து, தெளிவு வைத்து நேரடி நெல் விதைப்பு செய்து வருகின்றனர்.
இதனால் நடவு கூலி, பெருமளவு மிச்சமாகிறது. நேரடி நெல் விதைப்பு செய்யும் நடைமுறையை விவசாயிகள் அதிகளவில் அனைத்து பட்டங்களிலும் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்தாண்டு பெருமாள் ஏரியில், மழை நீர் தேங்கி தண்ணீர் நிரம்பியுள்ளது.
இதன் காரணமாக, இப்பகுதி விவசாயிகள் இந்த ஆண்டுக்கு குறுவை பட்டத்திற்கு நெல் சாகுபடி செய்ய ஆர்வமடைந்தனர். அதையொட்டி இப்பகுதி விவசாயிகள் சேடை உழவு செய்தனர். பின்னர் இயற்கை உரங்களை தெளித்து, மீண்டும் உழவு செய்து நிலங்களை சமன் செய்தனர். அதைத் தொடர்ந்து சேடையில் நேரடி நெல் விதைப்பு செய்து, நவரை பருவத்திற்கு சாகுபடி செய்ய தொடங்கியுள்ளனர்.
கோடையிலும் அடிக்கடி மழை பொழிவு இருந்து வருகிறது. மேலும் பெருமாள் ஏரியில் போதுமான அளவு தண்ணீர் இருப்பதாலும், இப்பகுதி விவசாயிகள் ஆர்வத்துடன், குறுவை பருவத்திற்கு நெல் சாகுபடி செய்ய தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.