/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
லால்புரம் கிராம மக்கள் கடலுாரில் ஆர்ப்பாட்டம்
/
லால்புரம் கிராம மக்கள் கடலுாரில் ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 22, 2025 06:54 AM

கடலுார்; லால்புரம் ஊராட்சியை சிதம்பரம் நகராட்சியுடன் இணைப்பதை கண்டித்து கடலுார் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சிதம்பரம் அடுத்த லால்புரம் ஊராட்சி அனைத்து கிராம மக்கள், மா.கம்யூ.,- இந்திய.,கம்யூ., மற்றும் விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளிகள் சங்கம், மகளிர் சுய உதவிக்குழுவினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சேகர், ஒன்றிய செயலாளர் ஜாகிர் உசேன் தலைமை தாங்கினர். நிர்வாகிகள் தமீமுன் அன்சாரி, ஆனந்தன், குளோப், நாகராஜ் பாக்கியம், மா., கம்யூ., மாவட்ட செயலாளர் மாதவன், அமர்நாத், சுப்பராயன், சத்தியமூர்த்தி உட்பட 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பின், கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைக்கேட்புக் கூட்டத்தில் கலெக்டர் சிபி ஆதித்தியா செந்தில்குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
மனுவில்,'லால்புரத்திற்கு இணைப்பு சாலை இல்லை. 450 ஏக்கர் விவசாய நிலம் மூலம் 3,000 விவசாய கூலித் தொழிலாளர்கள் பயனடைகின்றனர். 3,500 கால்நடைகள் உள்ளது. அதனால் நகராட்சியுடன் இணைப்பை ரத்து செய்து, விவசாயத்தையும், தொழிலாளர்களையும் காப்பாற்ற வேண்டுமென' கூறப்பட்டிருந்தது.