மீண்டும் வம்புக்கு இழுக்கும் பாக்., அரசு: இந்திய துாதருக்கு எரிவாயு, குடிநீர் நிறுத்தம்
மீண்டும் வம்புக்கு இழுக்கும் பாக்., அரசு: இந்திய துாதருக்கு எரிவாயு, குடிநீர் நிறுத்தம்
ADDED : ஆக 12, 2025 01:28 AM

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உள்ள இந்திய துாதரக அலுவலக ஊழியர்களுக்கான எரிவாயு, குடிநீர் உள்ளிட்டவை நிறுத்தப்பட்டிருப்பது, மீண்டும் பதற்றத்திற்கு வழிவகுத்துள்ளது.
ஜம்மு - -காஷ்மீர் தாக்குதலை தொடர்ந்து அண்டை நாடான பாகிஸ்தானுடனான உறவு மோசமடைந்தது.
சிந்து நதிநீர் ஒப்பந்தத்தையும் இந்தியா நிறுத்தி வைத்தது. பின்னர், பாக்., தலைவர்கள் போர் நிறுத்தம் கோரியதைத் தொடர்ந்து மோதல் முடிவுக்கு வந்தது.
இரு நாடுகள் இடையே ஓரளவு பதற்றம் தணிந்த நிலையில், மீண்டும் இந்தியாவை சீண்டும் விதமாக பாக்., அரசு நடந்து வருகிறது.
இஸ்லாமாபாதில் உள்ள இந்திய துாதரக அலுவலக ஊழியர்களுக்கான அடிப்படை வசதிகளில் பாகிஸ்தான் கை வைத்துள்ளது.
அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பைப் லைன் காஸ் நிறுத்தியதோடு, சமையல் சிலிண்டர்களையும் வினியோகிக்கக் கூடாது என எச்சரித்துள்ளது.
இத்துடன், சுத்தமான குடிநீர், செய்தித்தாள் வினியோகம் போன்றவற்றையும் தடுத்துள்ளது.
சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா உறுதியாக அமல்படுத்தியதைத் தொடர்ந்து, அந்நாட்டு உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., துாண்டுதலின் பேரிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நடவடிக்கைகள், துாதரகங்களின் சீரான செயல்பாடு, ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் கண்ணியத்தை உறுதிசெய்யும் வியன்னா உடன்படிக்கை விதிகளை மீறும் வகையில் இருப்பதாக இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
அது மட்டுமல்லாமல், இந்தியா- - பாகிஸ்தான் இடையே ஏற்கனவே பலவீனமாக உள்ள உறவை மேலும் சிதைப்பதாகவும் கண்டித்துள்ளது.