/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சவூதியில் இறந்த நபரின் உடலை கொண்டு வர கடிதம்
/
சவூதியில் இறந்த நபரின் உடலை கொண்டு வர கடிதம்
ADDED : மே 17, 2025 12:35 AM

விருத்தாசலம்: சவூதியில் இறந்த விருத்தாசலம் தொழிலாளியின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர வெளியுறவுத்துறை அமைச்சருக்கு எம்.பி., விஷ்ணு பிரசாத் கடிதம் கொடுத்துள்ளார்.
விருத்தாசலம் அடுத்த ஆலிச்சிகுடி கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம்,53; இவர், கடந்த 2014 முதல் சவூதி அரேபியா அல் ரஷித் டிரேடிங் நிறுவனத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்தார். கடந்த 14ம் தேதி இரவு பணி முடிந்து அறைக்கு திரும்பிய முருகானந்தம், குடும்பத்தினரிடம் மொபைல் போனில் பேசினார்.
அன்று, நள்ளிரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்த அவரை, மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது இறந்தார். இதுகுறித்து சவூதி அரேபியா நிறுவனத்தினர் முருகானந்தம் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இறந்த முருகானந்தத்திற்கு மனைவி ஜெயா, 45. மகன்கள் கோகுல்ராஜ், 23, ராகுல்ராஜ், 16, உள்ளனர். அதில், மனைவியும், மூத்த மகனும் மாற்றுத்திறனாளி. கடலுார் எம்.பி., விஷ்ணு பிரசாத், முருகானந்தம் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து கடிதம் கொடுத்துள்ளார்.