/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அண்ணா பாலத்தின் கீழ் இணைப்பு சாலை அமைக்கப்படுமா: போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண ஆலோசனை
/
அண்ணா பாலத்தின் கீழ் இணைப்பு சாலை அமைக்கப்படுமா: போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண ஆலோசனை
அண்ணா பாலத்தின் கீழ் இணைப்பு சாலை அமைக்கப்படுமா: போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண ஆலோசனை
அண்ணா பாலத்தின் கீழ் இணைப்பு சாலை அமைக்கப்படுமா: போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண ஆலோசனை
ADDED : ஜன 04, 2024 04:04 AM

கடலுார்: கடலுார் மாநகரில் ஜவான்ஸ்பவன் சாலை சந்திப்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அண்ணா மேம்பாலத்தின் கீழ் இணைப்பு சாலை அமைக்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
கடலுார் மாநகரத்தில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். இது தவிர, சுற்றுப்பகுதியில் உள்ள 18 கிராமங்கள் மாநகராட்சியோடு இணைக்கப்பட உள்ளன. இதனால், மக்கள் புழக்கம் மேலும் அதிகரிக்கும். அத்துடன், புதுச்சேரியில் இருந்து காரைக்கால், நாகப்பட்டிணம், வேளாங்கண்ணி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, கும்பகோணம் போன்ற மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் பெரும்பாலும் கடலுார் வழியாகத்தான் செல்ல வேண்டும். அதனால் வாகன நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புறவழிச்சாலை அமைக்கப்பட்டாலும், அதன் வழியாக கனரக வாகனங்கள் வேண்டுமானால் செல்லலாம். ஆனால் பஸ், கார் போன்ற வாகனங்கள் கடலுார் மாநகருக்குள் வந்து செல்லும் நிலைதான் இருக்கும்.
கடலுாரில் பாரதி சாலை வழியாக செல்லும் வாகனங்களால் போக்குவரத்து நெரில் ஏற்படுவதை தவிர்க்க, ஜவான்ஸ்பவன் சாலை அமைக்கப்பட்டது. இதனால் பண்ருட்டி, புதுச்சேரி, திருக்கோவிலுார் செல்லும் வாகனங்கள் அண்ணா மேம்பாலத்தை கடந்து நகருக்கு வராமலேயே ஜவான்ஸ் பவன் சாலை வழியாக, நகர பகுதியை எல்லையான செம்மண்டலம் சாலைக்கு சென்று விடுகின்றன.
ஜவான்ஸ் பவன் சாலை வழியாக ஏராளமான கனரக வாகனங்கள் வரும் நிலையில், அந்த வாகனங்கள், திருப்பாதிரிபுலியூர் அண்ணா மேம்பால இறக்கத்தில் இணைகின்றன. ஏற்கனவே பாலம் இறக்கத்தில் சிக்னல் உள்ளது. இந்த சிக்னலுக்கும் ஜவான்ஸ்பவன் சாலைக்கும் வெறும் 10 மீட்டர் இடைவெளி மட்டுமே உள்ளது.
ஜவான்ஸ்பவன் சாலை வழியாக வரும் வாகனங்கள் முதுநகர் சாலையை பிடிக்க, அண்ணா மேம்பால சாலையை குறுக்காக கடக்க வேண்டும்.
ஏற்கனவே, இந்த சாலையில் வாகனங்கள் அதிக அளவில் சென்றுவரும் நிலையில், 'பீக்' அவரில், சாலையை கடக்க ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நிற்க வேண்டியுள்ளது. போக்குவரத்து போலீசார் சாலையை ஒழுங்கு படுத்தினால் மட்டுமே சாலையை எளிதாக கடக்க முடியும் என்ற நிலை இருந்து வருகிறது.
எனவே, இப்பிரச்னைகளை தவிர்க்க, ஜவான்ஸ் பவன் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் அண்ணா மேம்பாலத்திற்கு கீழ் சாலை அமைத்து, உழவர் சந்தைக்கு பின்பக்க சாலையோடு இணையுமாறு சாலை அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
இதேபோன்று, மதுரை மாநகரில் வைகை ஆற்றில் கல்பாலம், யானைக்கல் பாலம் என இரண்டு இடங்களில் பாலத்திற்கு கீழ் சாலை அமைத்து இடையூறு இல்லாத போக்குவரத்து நடந்து வருகிறது. அதேப்போல கடலுார் மாநகரிலும் அண்ணா மேம்பாலத்திற்கு கீழ் சாலை அமைத்தால் வாகன போக்குவரத்து இடையூறின்றி செல்ல முடியும். இதற்கு மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை திட்டமிடல் வேண்டும் என, மாவட்ட நிர்வாகத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆலோசனை தெரிவிக்கின்றனர்.
கடலுாரில் இதுபோன்ற சாலை அமைக்க நிலம் ஏதும் கையகப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. சாலை போட அரசுக்கு சொந்தமான இடமே இருப்பதால் இப்பணியை உடனே நிறைவேற்ற முடியும்.
எனவே, நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், அதற்கான முயற்சியில் இறங்கினால், இப்பகுதியில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.