ADDED : டிச 27, 2025 06:31 AM
கடலுார்: நபார்டு வங்கியின் மூலம் 2026--27ம் ஆண்டுக்கான கடன் திறன் மதிப்பீட்டு அறிக்கையினை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வெளியிட்டார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
கடலுார் மாவட்டத்திற்கான கடன் திறன் மதிப்பீட்டு ஆவணத்தை தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி (நபார்டு) கணித்து வெளியிட்டுள்ளது. இது நடப்பாண்டின், ஆண்டு கடன் திட்டத்துடன் ஒப்பிடும்போது, 18 சதவீதம் அதிகமாகும்.
பல்வேறு அரசு உதவித் திட்டங்களின் கீழ் கடன்களை விரைவாக அங்கீகரிக்க வங்கிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக வேளாண் துறையில் நடுத்தர மற்றும் நீண்டகால கடன்களுக்கான முக்கியத்துவத்தை வங்கிகள் கொடுக்க வேண்டும்.
விவசாய இயந்திர மயமாக்கல், சிறு துளி பாசன அமைப்புகள் மற்றும் கால்நடை வளர்ச்சிக்கு பெருமளவு வாய்ப்புகள் வழங்க வேண்டும்.
இந்த கடன் திட்ட அறிக்கை, பல அரசு துறைகள், வங்கிகள், மற்றும் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளின் ஆலோசனை மற்றும் புள்ளி விவர அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், மாநில மற்றும் தேசிய அளவிலான திட்டங்களை அடிப்படையாக கொண்டு, அரசு அதிகாரிகள், வங்கிகள் மற்றும் பிற நிறுவனங்களுடன் ஆலோசனை செய்து தயாரிக்கப்பட்டுள்ளது.
கடன் திட்டத்தை இறுதியாக உருவாக்க கிளை அளவிலான கடன் திட்டங்களை வங்கிகள் தயாரிக்க வேண்டும். மேலும், வங்கிகள் இத்திட்ட ஆவணத்தைப் பயன்படுத்தி தங்கள் இலக்குகளை வெற்றிகரமாக நிறை வேற்ற வேண்டும்.
கடலுார் மாவட்டத்திற்கு அதிகரிக்கப்பட்ட கடன் திறன், விவசாய வளர்ச்சி, சிறு மற்றும் மத்திய அளவிலான தொழில்முனைவோரின் முன்னேற்றம் மற்றும் மாவட்டத்தின் மொத்த பொருளாதார வளர்ச்சிக்கான உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது.
இவ்வாறு அவர் கலெக்டர் கூறினார்.
இந்த கூட்டத்தில் ஆர்.பி.ஐ., உதவி தலைமை மேலாளர் ஸ்ரீதர், நபார்டு உதவி தலைமை மேலாளர் சசிகுமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அசோக்ராஜா, இந்தியன் வங்கி துணை மண்டல மேலாளர் பாலமுருகன், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் சொர்ணலட்சுமி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

