/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மூடியுள்ள கடைகளால் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு: பரிசீலனை குழுவின் துரித நடவடிக்கை தேவை
/
மூடியுள்ள கடைகளால் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு: பரிசீலனை குழுவின் துரித நடவடிக்கை தேவை
மூடியுள்ள கடைகளால் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு: பரிசீலனை குழுவின் துரித நடவடிக்கை தேவை
மூடியுள்ள கடைகளால் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு: பரிசீலனை குழுவின் துரித நடவடிக்கை தேவை
ADDED : பிப் 26, 2024 05:48 AM

கடலுார்: கடலுார் பஸ் நிலையத்தில் மூடியுள்ள கடைகளால் மாநகராட்சிக்கு ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பை சரிசெய்ய, வாடகையை பரிசீலனை செய்ய அமைக்கப்பட்டுள்ள குழு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடலுார் திருப்பாதிரிப்புலியூரில் மாநகராட்சி பஸ் நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் அதிகளவில் இயக்கப்படுகின்றன. பஸ் நிலையம் அருகில் பூ மார்க்கெட், பான்பரி மார்க்கெட், ரயில் நிலையம் உள்ளதால், பஸ் நிலையத்திற்கு மக்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.
இதை தவிர பள்ளி, கல்லுாரி மாணவர்களும் பஸ் நிலையத்திற்குள் காலை, மாலை குவிந்து வருவதால், எப்போதும் கூட்ட நெரிசலுடன் காணப்படுகின்றது.
இந்நிலையில், பஸ் நிலைய வளாகத்திற்குள் மாநகராட்சி சார்பில் 146 கடைகள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இங்கு ஓட்டல், இனிப்பு கடைகள், குளிர்பான கடைகள், பழக்கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த கடைகள் மூலம் பெறப்படும் வாடகை தொகை மாநகராட்சியின் வளர்ச்சி பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில், இங்குள்ள கடைகள் மூலம் மாநகராட்சிக்கு வர வேண்டிய வாடகை தொகை 7.35 கோடி நிலுவையில் இருந்தது. இதில், தற்போது 1.50 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 5.76 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், பஸ் நிலைய வளாகத்தில் சென்னை, விருத்தாசலம், சிதம்பரம் மார்க்கத்தில் உள்ள 22 கடைகள் தற்போது திறக்கப்படாமல் பூட்டி கிடக்கிறது. இந்த கடைகளில் இருந்து மட்டும் 1.80 கோடி ரூபாய் வாடகை பாக்கி நிலுவை உள்ளது. இந்த வாடகை பாக்கியை செலுத்தாமல், கடையை வாடகைக்கு எடுத்தவர்கள், காலி செய்துவிட்டு சென்றுவிட்டனர்.
இந்த கடைகளுக்கு டெண்டர் விட்டாலும், வாடகை அதிகமாக இருப்பதாக கூறி கடைகளை எடுப்பதற்கு வியாபாரிகள் தயக்கம் காட்டுகின்றனர். இதனால், 22 கடைகள் மூலம் மாநகராட்சிக்கு வரும் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி கடைகளுக்கு வாடகை நிர்ணயம் செய்ய கடந்த 2017-18ம் ஆண்டு தமிழக அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு நிர்ணயித்த தொகையே தற்போது வாடகையாக வசூல் செய்யப்படுகின்றது. இந்த வாடகையை மறுபரிசீலனை செய்ய தமிழக அரசு தற்போது மீண்டும் ஒரு குழுவை அமைத்துள்ளது. இக்குழுவினர் வாடகை தொகை குறித்து விரைந்து பரிசீலனை செய்தால், கடலுார் பஸ் நிலையத்தில் மூடியுள்ள கடைகள் மூலம் வருவாய் கிடைக்கும்.
மேலும், இந்த பஸ் நிலையத்தில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இங்குள்ள பழைய சேதமடைந்த கடைகளை சீரமைக்கவும், புதிய கடைகள் கட்டுவதற்கும், பஸ்கள் நிற்கும் இடத்தை கூடுதலாக்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்வதற்கு 5 கோடி ரூபாய் மதிப்பில் அதிகாரிகள் திட்டம் தயாரித்துள்ளனர். இதற்கான கோப்புகள் அரசிற்கு அனுப்பப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்த பின் பணிகள் துவங்கப்படவுள்ளன.

