/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாசிமக உற்சவத்திற்கு மணிமுக்தாறு... சீரமைப்பு; நிரந்தரமாக பராமரிக்க கோரிக்கை
/
மாசிமக உற்சவத்திற்கு மணிமுக்தாறு... சீரமைப்பு; நிரந்தரமாக பராமரிக்க கோரிக்கை
மாசிமக உற்சவத்திற்கு மணிமுக்தாறு... சீரமைப்பு; நிரந்தரமாக பராமரிக்க கோரிக்கை
மாசிமக உற்சவத்திற்கு மணிமுக்தாறு... சீரமைப்பு; நிரந்தரமாக பராமரிக்க கோரிக்கை
ADDED : பிப் 15, 2024 05:40 AM

விருத்தாசலம் : விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக உற்சவத்துக்கு, மணிமுக்தாற்றில் கழிவுநீர், முட்செடிகளை அகற்றி துாய்மைப்படுத்தப்பட்டது.
விருத்தாசலத்தில் பழமையான விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. மாசிமக பிரம்மோற்சவம், ஆடிப்பூர திருக்கல்யாணம் உட்பட ஆண்டுதோறும் திருவிழாக்கள் நடக்கிறது. கோவில் எதிரே பாய்ந்தோடிய மணிமுக்தாற்றில் நீராடி, சாமி தரிசனம் செய்வது, தொன்று தொட்டு வழக்கத்தில் உள்ளது.
குறிப்பாக, மாசிமக பிரம்மோற்சவத்தில், முன்னோர்களுக்கு திதி கொடுக்க வேண்டி, லட்சக்கணக்கானோர் மணிமுக்தாற்றில் நீராடுவர்.
நாளடைவில் மக்கள் தொகை பெருகியதால், நகரில் உள்ள குடியிருப்புகள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வடிகால் வழியாக மணிமுக்தாற்றில் விடப்பட்டது.
இதனால் மணிமுக்தாறு பாலத்தின் கீழ் பகுதியில் கழிவுநீர் தேங்கி, மினி கூவம்போல காட்சியளிக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் 'மலரட்டும் மணிமுக்தாறு' என்ற தலைப்பில் என்.எல்.சி., நிறுவனம், ரோட்டரி சங்கம் இணைந்து ஆற்றை துாய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டது. ஆனால், பராமரிக்க தவறியதால், ஓரிரு மாதங்களில் மீண்டும் கழிவுநீர் தேங்கும் அவலம் ஏற்பட்டது.
மேலும், இறைச்சி கழிவுகள், பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்து துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் ஆற்றை கடந்து செல்ல முடியாமல் சிரமமடையும் நிலை உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் மணிமுக்தாறு பாலத்தை பலப்படுத்தும் பணி நடந்தது. அப்போது, பில்லர்களை தாங்கும் வகையில், தளம் போடப்பட்டதால் கழிவுநீர் பாலத்தை கடந்து செல்வது முற்றிலுமாக தடைபட்டது.
இந்நிலையில், விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக உற்சவம் இன்று துவங்கி, வரும் 24ம் தேதி மாசிமக பிரம்மோற்சவம் நடக்கிறது.
இதற்காக, நகராட்சி நிர்வாகம் சார்பில் ஆற்றை சுத்தப்படுத்தி, பொது மக்கள் திதி கொடுக்கும் வகையில் சமப்படுத்தும் பணிகளை அமைச்சர் கணேசன் துவக்கி வைத்தார்.
இதனால், ஆற்றின் ஒரு பகுதியில் கழிவுநீர், முட் செடிகள் அப்புறப்படுத்தப்பட்டு, துாய்மையாக மாறியது. மணிமுக்தாற்றை நிரந்தரமாக பராமரிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

