/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமக கொடியேற்றம்
/
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமக கொடியேற்றம்
ADDED : பிப் 15, 2024 11:32 PM

விருத்தாசலம் : விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக பிரம்மோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
விருத்தாசலம் விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவிலில், மாசிமக பிரம்மோற்சவ கொடியேற்று விழா நேற்று நடந்தது.
இதையொட்டி காலை 10:00 மணியளவில், நடராஜர் சன்னதி, ஆழத்து விநாயகர், சுவாமி, அம்பாள், சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு ஆராதனை நடந்தது.
பகல் 12:00 மணிக்கு மேல், உற்சவ மூர்த்திகள் எழுந்தருளியதும், கொடி மரத்துக்கு பால், திரவிய அபிேஷகம் செய்து, கயிலை வாத்தியங்கள் முழங்க கொடியேற்றம் நடந்தது. பின்னர், பிரதோஷ நந்தி கொடிமரம் உட்பட பஞ்சமூர்த்திகள் கொடிமரத்தில் கொடியேற்றம் நடந்தது.
மாலை 6:00 மணியளவில், சிறப்பு தீபாராதனை நடந்தது. இரவு சாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். முக்கிய நிகழ்வாக, வரும் பிப்ரவரி 20ம் தேதி விபசித்து முனிவருக்கு சாமி காட்சியளிக்கும் ஐதீக நிகழ்ச்சி, 23ம் தேதி தேரோட்டம், 24ம் தேதி மாசிமகம், 25ம் தேதி தெப்பல் உற்சவம், 26ம் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவம் நடக்கிறது.