/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாயமான பள்ளி மாணவர்கள் பெற்றோர்களிடம் ஒப்படைப்பு
/
மாயமான பள்ளி மாணவர்கள் பெற்றோர்களிடம் ஒப்படைப்பு
ADDED : மார் 27, 2025 04:23 AM

திட்டக்குடி: திட்டக்குடியில் மாயமான தனியார் பள்ளி மாணவர்கள் இருவரை, இன்ஸ்டாகிராம் மூலம் போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
திட்டக்குடி அடுத்த இடைச்செருவாய் கிராமத்தை சேர்ந்தவர் சாமிதுரை மகன் ராஜதுரை, 14; தொழுதுார் அருகே தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறார். கடந்த 22ம் தேதி இரவு 9:30 மணியளவில் வீட்டை விட்டு வெளியே சென்ற மாணவரை காணவில்லை. இதேபோன்று, அதே பள்ளியில் படிக்கும் திட்டக்குடி எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்த ராஜா மகன் சச்சின், 14, என்பவரையும் காணவில்லை.
இருவரது பெற்றோர்களும் பள்ளிக்கு சென்று விசாரித்தபோது, அவர்கள் இருவரும் ஒரு மாதமாக பள்ளிக்கு வரவில்லை எனவும், வேலைக்கு வெளியூர் செல்வதாகவும் சக மாணவர்களிடம் தெரிவித்து சென்றனர். புகாரின்பேரில், திட்டக்குடி போலீசார் வழக்கு பதிந்து இரு மாணவர்களையும் தேடி வந்தனர்.
காணாமல் போன ராஜதுரை, ஆ.பாளையத்தில் உள்ள உறவினர் மகன் சக்திவேல் 17, என்பவரிடம் இன்ஸ்டாகிராமில் பேசியதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விசாரணையில் திருச்சியில் இரு மாணவர்களும் இருப்பது தெரியவந்து, நேற்று காலை திருச்சி சென்ற திட்டக்குடி போலீசார் இருவரையும் மீட்டு வந்தனர். இருவரும் மொபைல் போன் டிஸ்பிளே மாற்ற திருச்சி சென்றதாக தெரிவித்தனர். பின்னர் இருவரது பெற்றோர்களிடம் மாணவர்களை போலீசார் ஒப்படைத்தனர்.