/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரேஷன் கடைகளில் நவீன தொழில்நுட்ப தராசு... அறிமுகம் ; எடை குறைவு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி
/
ரேஷன் கடைகளில் நவீன தொழில்நுட்ப தராசு... அறிமுகம் ; எடை குறைவு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி
ரேஷன் கடைகளில் நவீன தொழில்நுட்ப தராசு... அறிமுகம் ; எடை குறைவு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி
ரேஷன் கடைகளில் நவீன தொழில்நுட்ப தராசு... அறிமுகம் ; எடை குறைவு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி
ADDED : மார் 13, 2025 12:27 AM

கடலுார்: கடலுார் ரேஷன் கடையில் பொருட்கள் எடை குறைவு பிரச்னைக்கு தீர்வு காண விற்பனை முனைய கருவியுடன் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தராசு இணைக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அரிசி, கோதுமை இலவசமாகவும், சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மானிய விலையிலும் வழங்கப்படுகிறது. ரேஷன் கடைகளில் பதிவேட்டில் வரவு வைத்து பொருட்கள் வழங்குவது நடைமுறையில் இருந்தது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் பி.ஓ.எஸ்., (விற்பனை முனையம்) கருவி அறிமுகம் செய்யப்பட்டது. அதில் ரேஷன் கார்டை ஸ்கேன் செய்து கார்டுதாரர்களின் விரல் பதிவு, கருவிழி பதிவு செய்து மின்னணு தராசில் எடையிட்டு அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது. எந்த முறையில் பொருட்கள் விநியோகம் செய்தாலும் எடை குறைத்து வழங்குவதாக புகார் உள்ளது. இந்த முறைகேட்டை தவிர்க்க நவீன தொழில்நுட்பத்தில் தராசில் எவ்வளவு எடை அளவீடு செய்யப்படுகிறதோ அந்தளவு பி.ஓ.எஸ்., கருவியில் பதிவு செய்து பில் வழங்கும் புதிய முறை சோதனை அடிப்படையில் மாவட்டம் வாரியாக ஒரு சில ரேஷன் கடைகளில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
கடலுார் மாவட்டத்தில், கடலுார், பண்ருட்டி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், விருத்தாசலம், திட்டக்குடி, குறிஞ்சிப்பாடி, புவனகிரி, வேப்பூர், ஸ்ரீமுஷ்ணம் என 10 தாலுகாக்கள் உள்ளன. மாவட்டம் முழுதும் 1,146 முழு நேரம் மற்றும் 312 பகுதி நேரம் என 1,458 ரேஷன் கடைகள் உள்ளன. மாவட்டத்தில் 7,84,617 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளன.
மாவட்டத்தில் முதன் முறையாக கடலுார் சரவணபவ கூட்டுறவு அங்காடி எண் 1ல் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தராசு, விற்பனை முனைய கருவியுடன் இணைக்கப்பட்டு பொருட்கள் வழங்குவது நடைமுறைக்கு வந்துள்ளது.
இதுகுறித்து உணவு பொருள் வழங்கல் துறை அதிகாரி கூறுகையில், ரேஷன் விற்பனையாளர், கார்டுதாரருக்கு வழங்கப்படும் உணவு பொருட்கள் மற்றும் அவற்றின் எடை அளவுகளை, 'பாய்ன்ட் ஆப் சேல்' கருவியில் பதிவு செய்வது நடைமுறையில் உள்ளது.
புதிய தராசில் வைக்கப்படும் பொருளின் எடை, தானியங்கி தொழில்நுட்பத்தில், 'பாய்ன்ட் ஆப் சேல்' கருவிக்கு அனுப்பப்பட்டு பதிவு செய்யப்படும். தராசில் எவ்வளவு எடைக்கு பொருள் வைக்கிறாரோ, அதே எடையளவு உடனுக்குடன், 'பாய்ன்ட் ஆப் சேல்' கருவியில் பதிவு செய்யப்பட்டு கார்டுதாரருக்கு ரசீதாக வழங்கப்படும். கார்டுதாரருக்கு எடை குறைவாக பொருள் வழங்கிவிட்டு, கூடுதலாக வழங்கியதாக பதிவு செய்ய முடியாது.
இதனால், ரேஷன் பொருட்களை எடை குறைவாக விநியோகிப்பது போன்ற முறைகேடுகள் தடுக்கப்படும். படிப்படியாக அனைத்து கடைகளிலும் இத்திட்டம் விரிவுப்படுத்தப்படும் என்றார்.