UPDATED : அக் 16, 2026 03:17 PM
ADDED : அக் 16, 2026 03:14 PM

வேப்பூர்: வேப்பூரில் ஊர் வழிகாட்டி பெயர் பலகையில் ஸ்டிக்கர்கள் சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர்.
சென்னை-திருச்சி, கடலூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலைகள் இணையும் இடத்தில் வேப்பூர் உள்ளது. இவ்வழியே, சென்னை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ஆத்தூர், சேலம், பெரம்பலூர், மதுரை, சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு போக்குவரத்து சிரமமின்றி செல்ல முடிவதால், தினசரி லட்சக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இங்கு, கடலூர்-சேலம் சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு, மற்ற மாவட்டங்களுக்கு செல்லும் வழிகளை தெரிந்து கொள்ளும் விதமாக, வேப்பூர் கூட்டுரோட்டில் சாலையின் இருபுறங்களிலும், ஊர் வழிகாட்டி பெயர் பலகைகள் வைக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த 2024ல் நடந்த சாலை விரிவாக்கத்தின் போது, சேலம் மார்க்கத்தில் வைத்திருந்த பலகை அகற்றப்பட்டது. விருத்தாசலம் மார்க்கத்தில் உள்ள வழிகாட்டி பலகை, பராமரிப்பு பணிகள் இல்லாததால் ஸ்டிக்கர் சேதமடைந்துள்ளது. இதனால், கடலூர்-சேலம் சாலையில் பயணிப்பவர்கள், சுற்றுலா பயணிகள் வழி தெரியாமல் அவதியடைகின்றனர். எனவே, வேப்பூரில் சேதமடைந்த ஊர் வழிகாட்டி பலகையை சீரமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
