/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மும்பை, குஜராத் மாநிலங்களில் கடலுார் இளநீருக்கு 'மவுசு'
/
மும்பை, குஜராத் மாநிலங்களில் கடலுார் இளநீருக்கு 'மவுசு'
மும்பை, குஜராத் மாநிலங்களில் கடலுார் இளநீருக்கு 'மவுசு'
மும்பை, குஜராத் மாநிலங்களில் கடலுார் இளநீருக்கு 'மவுசு'
ADDED : டிச 25, 2024 08:35 AM

கடலுார் மாவட்டத்தில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. குறிப்பாக சேடப்பாளையம், அன்னவல்லி, தொண்டமாநத்தம், குறிஞ்சிப்பாடி, புதுக்குப்பம், வழிசோதனைபாளையம், செம்மங்குப்பம் உட்பட 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் தென்னை விவசாயம் அதிகம் நடக்கிறது.
இக்கிராமங்களில் 2,000 ஏக்கரில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இருந்து தேங்காய், இளநீர் ஆண்டுதோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் மும்பை, குஜராத் உட்பட பல்வேறு வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்தாண்டு விளைச்சல் அதிகமாக உள்ளதால் சென்னைக்கு தினமும் 40 டன் இளநீர் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
இதுகுறித்து தென்னை விவசாயி கூறுகையில், 'மாவட்டத்தில் கடந்தாண்டை விட இந்தாண்டு வழக்கத்தை விட இளநீர் விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்தாண்டு மழை காரணமாக நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளதால் விளைச்சல் அதிகமாக உள்ளது.
மும்பை, குஜராத் போன்ற வெளி மாநிலங்களில் வெயில் சீசன் என்பதால் இளநீர் தேவை அதிகரித்தது. கடந்த மாதம் வரை வெளிமாநிலங்களுக்கு இளநீர் அனுப்பி வைக்கப்பட்டது.
தற்போது, தமிழகத்தில் சென்னை, விழுப்புரம் உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு தினமும் 40 டன் இளநீர் லாரிகள் மூலமாக அனுப்பி வைக்கும் பணிகள் நடந்து வருகிறது. தற்போது, ஒரு டன் இளநீர் 12,000 ரூபாய்க்கும், வெயில் காலங்களில் 15,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தேங்காய் விளைச்சல் வழக்கத்தை விட குறைவு என்பதால் ஒரு டன் 55,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது' என்றார்.