/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மிஸ்டர் தமிழ்நாடு, மிஸ்டர் தென்னிந்தியா மங்கலம்பேட்டை பாடி பில்டர் அசத்தல்
/
மிஸ்டர் தமிழ்நாடு, மிஸ்டர் தென்னிந்தியா மங்கலம்பேட்டை பாடி பில்டர் அசத்தல்
மிஸ்டர் தமிழ்நாடு, மிஸ்டர் தென்னிந்தியா மங்கலம்பேட்டை பாடி பில்டர் அசத்தல்
மிஸ்டர் தமிழ்நாடு, மிஸ்டர் தென்னிந்தியா மங்கலம்பேட்டை பாடி பில்டர் அசத்தல்
ADDED : ஜூலை 03, 2025 01:27 AM

விருத்தாசலம் : மிஸ்டர் தென்னிந்தியா, மிஸ்டர் தமிழ்நாடு என பாடி பில்டிங் போட்டிகளில், மங்கலம்பேட்டை வாலிபர் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்து வருகிறார்.
விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை, விசலுார் கிராமத்தை சேர்ந்தவர் வைத்தியலிங்கம் - மணியம்மாள் தம்பதியரின் மூத்த மகன் நல்லமுத்து, 29. பத்து ஆண்டுகளுக்கு முன் உடற்பயிற்சி கூடத்தில் காலடி வைத்த இவர், மாவட்ட ஆணழகன் போட்டி முதல் சமீபத்தில் நடந்த மிஸ்டர் தமிழ்நாடு, மிஸ்டர் தென்னிந்தியன் பாடி பில்டிங் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்று, சாதனை படைத்து வருகிறார்.
இது குறித்து நல்லமுத்து கூறுகையில், 'நான் பத்தாம் வகுப்பு படித்தபோது தந்தை இறந்து விட்டார். குடும்பத்துக்கு மூத்த மகனான நான், தம்பி, தங்கையுடன் சேர்ந்து வறுமையில் படிக்க ஆரம்பித்தேன். எங்களை அம்மா மணியம்மாள், விவசாய கூலி வேலைக்கு சென்று, கடும் நெருக்கடியில் படிக்க வைத்தார். வறுமையிலும் தொழில்நுட்ப பொறியியல் (டி.இ.இ.இ., ) பட்டம் பெற்றேன்.
கடந்த 2015ல் கல்லுாரிக்கு சென்றபோது, விருத்தாசலத்தில் உள்ள உடற்பயிற்சி கூடத்திற்கு செல்லத் துவங்கினேன். அங்கு கிடைத்த ஊக்கம் காரணமாக, 2017ல் கடலுார் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டியில், 70 கிலோ எடை பிரிவில் 6வது இடம் பெற்றேன். அந்த உத்வேகத்தில், 2018ல் நடந்த கடலுார் மாவட்ட அளவிலான 70 கிலோ எடை பிரிவில் மூன்றாமிடம் பிடித்தேன்.
அதன்பின், மிஸ்டர் தமிழ்நாடு போட்டிக்கு தயாரானபோது, கொரோனா ஊரடங்கு காரணமாக போட்டி தடைபட்டது. நடப்பாண்டில், ஏப்ரல் 26, 27ம் தேதிகளில் திருச்சியில் அரசு அங்கீகாரம் பெற்ற தமிழ்நாடு பாடி பில்டிங் அசோசியேஷன் நடத்திய மிஸ்டர் தமிழ்நாடு போட்டியில், 85 கிலோ எடை பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றேன்.
தொடர்ந்து, மே 17, 18ம் தேதிகளில் சேலத்தில் நடந்த ஆறு மாநிலங்களுக்கு இடையேயான மிஸ்டர் தென்னிந்தியா போட்டியிலும் வெள்ளிப் பதக்கம் வென்றேன். எனக்கு உறுதுணையாக உடற்பயிற்சி ஆசிரியர்கள் சென்னை அரசு மற்றும் வடலுார் பாலமுருகன் ஊக்கப்படுத்தி வெற்றி பெற வைத்தனர்.
தற்போது, மங்கலம்பேட்டையில் உள்ள ஈகிள் யுனிசெஃக்ஸ் பயிற்சி கூடத்தில், மாதம் 10 ஆயிரம் ஊதியத்தில் பயிற்சியாளராக பணிபுரிகிறேன். போதிய வருமானம் இல்லாத நிலையில் மாநில, தேசிய போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலையில் உள்ளேன்' என்றார்.