/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நகராட்சி குப்பை எடுக்கும் வாகனம் சிறைபிடிப்பு
/
நகராட்சி குப்பை எடுக்கும் வாகனம் சிறைபிடிப்பு
ADDED : நவ 09, 2025 06:55 AM

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் நகராட்சி குப்பை எடுக்கும் வாகனத்தை மக்கள் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதியில் சேரும் குப்பைகளை பல ஆண்டுகளாக திருக்குளத்தில் உள்ள கிடங்கில் சேமித்து வந்தனர். அங்கு குப்பையை தரம் பிரித்து அகற்றும் பணி நடப்பதால் அங்கேயே அதை சேமிக்க முடியவில்லை.
குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்காக மேல்பாதியில் இடம் வாங்கி ரூ.80 லட்சம் செலவில் சிமண்ட் களம் மற்றும் தண்ணீர் வசதி செய்தனர். ஆனால் ஒரு நாள்கூட உரம் தயாரிக்கும் பணி நடக்காததால் துர்நாற்றம் வீசியது.
மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கும் குப்பையை சேகரிக்க முடியவில்லை. சரவணபுரம் சாலையில் குப்பையை மலைபோல் குவித்து வந்தனர். மக்கள் எதிர்ப்பு தெரிவித்த போது, அங்குள்ள குப்பைகள் அகற்றப்படும் என நகராட்சி சார்பில், தெரிவிக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து அங்கு குப்பையை கொட்டி வந்தனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் அங்கு குப்பை கொட்ட சென்ற வாகனத்தை மக்கள் சிறை பிடித்து அங்குள்ள கோவில் வளாகத்தில் நிறுத்தினர். அப்பகுதியில் மலைபோல் குவித்துள்ள குப்பையை அகற்றினால் மட்டுமே வாகனத்தை விடுவிப்போம் என மக்கள் கூறினர். அதிகாரிகள் வாகனத்தை மீட்க நடவடிக்கை எடுக்காததால் இரண்டு நாட்களாக அங்கேயே நிற்கிறது.

