ADDED : நவ 13, 2024 10:45 PM

விருத்தாசலம்; விருத்தாசலத்தில் அரசு டவுன் பஸ் டயரில் பத்துக்கும் மேற்பட்ட ஆணிகள் அடித்திருக்கும் படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை 1, 2 ஆகியவற்றில் இருந்து தினசரி நுாற்றுக்கணக்கான பஸ்கள் இயக்கப்படுகின்றன. குக்கிராமங்கள் முதல் சென்னை உட்பட பல்வேறு பகுதிகளுக்கும் பஸ்கள் செல்கின்றன.
இந்நிலையில், விருத்தாசலத்தில் இருந்து பவழங்குடி செல்லும் தடம் எண் 6 பி அரசு டவுன் பஸ், கடந்த சில நாட்களுக்கு முன் பழுதான நிலையில் பணிமனைக்குள் நிறுத்தப்பட்டது.
அப்போது, பஸ்சின் முன்புற டயரில் பத்துக்கும் மேற்பட்ட ஆணிகள் அடிக்கப்பட்டிருந்தன. உடனடியாக டயரை கழற்றி, ஆணிகள் அப்புறப்படுத்தப்பட்டு, மீண்டும் பஸ்சில் பொருத்தப்பட்டது.
இது தொடர்பாக பணிமனை நிர்வாகம் சார்பில் விருத்தாசலம் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அரசு டவுன் பஸ்சை கவிழ்க்க சதியா என டயரில் ஆணிகள் அடங்கிய படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.