/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தேசிய நதிகள் இணைப்பு: விவசாயிகள் சங்கம் மனு
/
தேசிய நதிகள் இணைப்பு: விவசாயிகள் சங்கம் மனு
ADDED : ஏப் 12, 2025 10:09 PM

கடலுார்: சர்க்கரை ஆலைகள் விவசாயிகள் பெயரில் பெற்ற கடனில் இருந்து விடுவிக்கக்கோரி, மனு அளித்தனர்.
இதுகுறித்து கலெக்டர் அலுவலகத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் அளித்துள்ள மனு:
விருத்தாசலம் அடுத்த ஏ.சித்துார் பகுதியில் உள்ள 2 சர்க்கரை ஆலைகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மற்றும் தனியார் வங்கியுடன் சேர்ந்து விவசாயிகள் பெயரில் அவர்களுக்கு தெரியாமல் கடன் வாங்கியுள்ளது.
இதில் 2017-18ம் ஆண்டுகளில் 8 வங்கி கிளைகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பெயரில் ரூ. 46 கோடியே 96 லட்சம் கடன் வாங்கப்பட்டுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பலகட்ட போராட்டங்கள் நடத்தியதன் பேரில், கடந்த 2023ம் ஆண்டு என்.சி.எல்.டி., மூலம் ஓ.டி.எஸ்., பெற்று கடன் தொகை செலுத்தப்பட்டது. ஆனால் இதுவரை வங்கியாளர்கள், விவசாயிகளை கடனில் இருந்து விடுவிக்கவில்லை.
விவசாயிகள் பெயரில் ஆலைகள் பெற்ற மோசடி கடனை என்.சி.எல்.டி., மூலம் செலுத்தியும், என்.ஓ.சி., வழங்காதததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் விவசாயிகள் அனைவருக்கும் உடனடியாக கடனில் இருந்து விடுவித்து, என்.ஓ.சி., வழங்கி, மீண்டும் வங்கிகளில் கடன் வழங்க உத்தரவிட வேண்டும். இல்லையெனில் மீண்டும் விவசாயிகள் போராட்டம் நடத்தும் நிலை ஏற்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

