/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரசு பள்ளிகளில் கற்றல் திறனை அதிகரிக்க... புது முயற்சி; மாவட்டத்தில் 'மகிழ் முற்றம் குழு' உருவாக்கம்
/
அரசு பள்ளிகளில் கற்றல் திறனை அதிகரிக்க... புது முயற்சி; மாவட்டத்தில் 'மகிழ் முற்றம் குழு' உருவாக்கம்
அரசு பள்ளிகளில் கற்றல் திறனை அதிகரிக்க... புது முயற்சி; மாவட்டத்தில் 'மகிழ் முற்றம் குழு' உருவாக்கம்
அரசு பள்ளிகளில் கற்றல் திறனை அதிகரிக்க... புது முயற்சி; மாவட்டத்தில் 'மகிழ் முற்றம் குழு' உருவாக்கம்
ADDED : ஜூலை 14, 2025 03:46 AM

விருத்தாசலம்: கடலுார் மாவட்டத்தில் புதிய முயற்சியாக அரசு பள்ளிகளில் கற்றல் திறனை அதிகரிக்க 'மகிழ் முற்றம் குழு' உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வித்துறை முயற்சியால் அரசு பள்ளிகளில் நடப்பாண்டில் பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி சதவீதம் அதிகரித்தது. இதில் பல்வேறு பகுதிகளில் குறைபாடுகள் இருந்தாலும், அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி பெற்றோரிடம் எதிர்பார்ப்பை அதிகரித்தது.
மேலும், தனியார் பள்ளிகளுக்கு நிகராக தேர்ச்சி சதவீதம் அமைந்தது, ஆசிரியர்களுக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
அரசுப் பள்ளி மாணவர்களிடம் ஏற்றத்தாழ்வுகளை தவிர்க்கும் வகையில் சீருடை அணியும் பழக்கம் இருந்தாலும், ஒரு சில பகுதிகளில் ஜாதி, மத பாகுபாடுகள் அதிகம் காணப்படுகிறது. பல வண்ணக் கயிறுகள் அணிதல், காப்பு அணிதல், நகம் மற்றும் தலைமுடி சீராக இல்லாதது, சீருடை அணிவதில் மாற்றம் தெரிகிறது.
இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னையும் அதிகரிக்கிறது. இதை தவிர்க்கும் வகையில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் 'மகிழ் முற்றம் குழு' என்ற அமைப்பு உருவாக்கி, புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐந்து அமைப்புகள் குழுக்களாக பிரிக்கப்பட்டது.
ஒவ்வொரு குழுக்களுக்கும் ஒரு தலைவர், ஒரு செயலாளர் என மாணவர்களே நியமிக்கப்பட்டனர். இவர்களை கண்காணிக்க ஒவ்வொரு குழுவுக்கும் ஆசிரியர்கள் ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டனர்.
இவர்கள் அனைவரையும் பள்ளியின் தலைமை ஆசிரியர் வழிநடத்துவார். இந்தக்குழு சக மாணவர்களிடம் தலைமைப் பண்பை வளர்த்தல், குழுவாக இணைந்து செயல்படுதல், சமூக மனப்பான்மை வளர்த்தல், வேற்றுமை இன்றி ஒற்றுமையுடன் செயல்படுதல், முழுமை வாய்ந்த வளர்ச்சியை ஆதரித்தல் என்ற நோக்கத்தில் செயல்படும்.
அதன்படி, குழு உறுப்பினர்கள் சக மாணவர்கள் வீட்டுப்பாடம் முடித்தல், நகங்களை பராமரித்தல், நல்ல பண்புகளை கடைபிடித்தல் போன்றவை பணிகளை கண்காணிப்பர். மேலும், மாணவர்களின் வருகைப் பதிவேடு, கல்வித்திறன், விளையாட்டு, ஒழுக்கம், சுகாதாரம் என மாணவர்களை தனித்தனியே கணக்கெடுப்பு செய்து பதிவு செய்ய உள்ளனர்.
இதற்கு மதிப்பெண்களும் தரப்பட்டு, ஆண்டுதோறும் கண்காணிக்கப்பட உள்ளது. இதற்கென தனியாக தயாரிக்கப்பட்ட அட்டவணையில் பள்ளியின் பெயர், தலைமை ஆசிரியர், மாதம், ஆண்டு, வெற்றி பெற்றக்குழு என பட்டியலிடப்பட்டு, அந்தந்த டி.இ.ஓ.,க்கள் மூலம் சி.இ.ஓ.,விடம் அனுப்பி வைக்கப்பட உள்ளது.
மாநிலம் முழுதும் உள்ள சி.இ.ஓ.,க்கள் வாயிலாக பள்ளிக்கல்வி இயக்குனர் ஒருங்கிணைந்து, கல்வியுடன் மாணவர்களின் இணை செயல்பாடுகளை ஊக்குவிக்க இம்முயற்சி கையாளப்படுகிறது.
கடந்த 11ம் தேதி பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவின்படி, கடலுார், விருத்தாசலம் கல்வி மாவட்டங்களில் உள்ள அனைத்து துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 'மகிழ் முற்றம் குழு' துவங்கப்பட்டது.
குழுக்களுக்கு தலைவர், செயலாளர்கள், ஆசிரியர்கள் அடங்கிய ஒருங்கிணைப்பாளர்களும் பதவியேற்றனர். இதன் படங்கள், வீடியோக்கள் அந்தந்த சி.இ.ஓ.,க்கள் வாயிலாக சேகரிக்கப்பட்டது.
அதன்படி, விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த 'மகிழ் முற்றம் குழு' பதவியேற்பு விழா, தலைமை ஆசிரியர் வினோத்குமார் தலைமையில் நடந்தது. உதவி தலைமை ஆசிரியர் ஜெயராணி வரவேற்றார்.
பள்ளி மேலாண்மைக்குழு தலைவி சத்யா மதிப்பீட்டு பலகையை திறந்து வைத்தார். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய குழுக்களின் தலைவர், செயலாளர்களாக மாணவர்களும், ஆசிரியர்களும் பதவியேற்றனர்.
பெற்றோர் கவனிப்பு தேவை
பெரும்பாலான அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் பெற்றோர் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளை சரிவர கவனிப்பது இல்லை.
தினசரி வீட்டுப்பாடம், கற்றல் திறன், வருகைப்பதிவேடு, ஒழுக்கம், விளையாட்டுத் திறன் குறித்து வகுப்பாசிரியர்களை மாதம் இருமுறை சந்தித்து கேட்டறிய வேண்டும்.
ஏதேனும் குறைகள் இருந்தால், மாணவர்களிடம் மனம்விட்டு பேசி நல்வழிப்படுத்த முயற்சிக்க வேண்டும். இதனால் கல்வி மட்டுமல்லாது ஒழுக்கமும் மேம்படும்.
ஆசிரியர்கள் முன்வர வேண்டும்
மேல்நிலை வகுப்பு மாணவர்கள் சிலர், வகுப்பறைக்குள் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. மாணவர்களை எந்த விதத்திலும் கண்டிக்க முடியாத நிலையில் உள்ள ஆசிரியர்களுக்கு, இவற்றில் இருந்து மீட்பதில் பெரும் சவால் உள்ளது. எனவே, வகுப்பறையில் ஒழுங்கீன மாணவர்களை உள்ளூர் போலீசார் உதவியுடன் ஆசிரியர்கள் மீட்க முயற்சி எடுக்க வேண்டும். தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனையை எளிதில் தடுக்க இம்முயற்சி பேருதவியாக இருக்கும்.
வழிகாட்டுதல் தேவை
அரசு மேல்நிலைப் பள்ளிகள் இயங்கும் பகுதிகளில் உள்ளூர் போலீசார் மாதம் ஒருமுறை தலைமை ஆசிரியர்களை சந்தித்து, ஒழுங்கீன மாணவர்கள் குறித்த விபரங்களை சேகரிக்க வேண்டும். மாதந்தோறும் இறைவணக்க கூட்டத்தில், போலீசாரின் வழிகாட்டல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்.
இன்றைய மாணவ சமுதாயத்தை சீர்படுத்தினால், நாளைய சமூக குற்றங்கள் உருவாவது வேருடன் களைய முடியும். இது குறித்து எஸ்.பி., தனிக்கவனம் செலுத்தி ஏழை, எளிய மாணவர்களின் நலனில் அக்கறை செலுத்த வேண்டும்.