/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
என்.எல்.சி., தொழிலாளர்கள் போனஸ் கேட்டு போராட்டம்
/
என்.எல்.சி., தொழிலாளர்கள் போனஸ் கேட்டு போராட்டம்
ADDED : செப் 19, 2024 01:08 AM

நெய்வேலி,: என்.எல்.சி.,யில் பணியாற்றும் ஒப்பந்த மற்றும் சொசைட்டி தொழிலாளர்கள் 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலுார் மாவட்டம், நெய்வேலி என்.எல்.சி., நிறுவனத்தில் 3,500 பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட 10 ஆயிரம் நிரந்தர பணியாளர்கள், 12 ஆயிரத்து 500 ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் சொசைட்டி தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில், நிரந்தர பணியாளர்களுக்கு கடந்த மாதம் போனஸ் வழங்கப்பட்டது.
தீபாவளி போனசாக 20 சதவீதம் வழங்க வலியுறுத்தி, ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் சொசைட்டி தொழிலாளர்களுக்கு ஆதரவாக என்.எல்.சி., ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கம் என்.எல்.சி., நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தது.
கோரிக்கை நிறைவேறாததால் நேற்று மதியம் என்.எல்.சி., முதல் சுரங்க நிர்வாக அலுவலகம் முன்பாக அமைதியான வழியில் போராட்டம் நடத்தப் போவதாக ஜீவா ஒப்பந்த தொழிற்சங்கம் அறிவித்தது. இதற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை.
இருப்பினும் 500க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று போராட்ட இடத்தில் குவிய துவங்கினர். நெய்வேலி டி.எஸ்.பி., சபியுல்லா தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் தொழிலாளர்களை ஆங்காங்கே தடுத்து நிறுத்தினர்.
சில இடங்களில் போலீசார் தொழிலாளர்களிடம் அநாகரீகமாக நடந்து கொண்டனர். இதனால் தொழிலாளர்கள் போலீசாருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
ஜீவா தொழிற்சங்கத்தின் மாவட்ட சிறப்பு செயலாளர் சேகர் மற்றும் தலைமை நிர்வாகிகள் போராட்டத்தின் அவசியம் குறித்து, தொழிலாளர்கள் மத்தியில் பேசினர். போராட்டம் காரணமாக அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.