/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குரூப்- 4 தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை... 64,143: 154 மையங்களில் நாளை விரிவான ஏற்பாடு
/
குரூப்- 4 தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை... 64,143: 154 மையங்களில் நாளை விரிவான ஏற்பாடு
குரூப்- 4 தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை... 64,143: 154 மையங்களில் நாளை விரிவான ஏற்பாடு
குரூப்- 4 தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை... 64,143: 154 மையங்களில் நாளை விரிவான ஏற்பாடு
ADDED : ஜூலை 10, 2025 11:28 PM

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (குரூப்-4) தேர்வை 64,143 பேர் எழுத உள்ளனர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (குரூப்-4) தேர்வு கடலுார் மாவட்டத்தில் நாளை 12ம் தேதி காலை 9:30 மணி முதல் பிற்பகல் 12:30 மணி வரை நடக்கிறது.
மாவட்டத்தில், கடலுார், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், புவனகிரி, விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம், திட்டக்குடி, வேப்பூர் ஆகிய 10 தாலுகாவில் 154 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 212 தேர்வு அறைகள் ஏற்படுத்தப்பட்டு 64,143 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர்.
ஒரு தாலுகாவில் ஒருவர் வீதம் 10 ஒருங்கிணைப்பு அலுவலர்களும், 38 நடமாடும் அலகுகள், 20 பறக்கும் படைகளும், 8 கருவூல அலகுகளும் தேர்வுப் பணியில் ஈடுபட உள்ளனர். தேர்வு நடப்பதை பார்வையிட 220 வீடியோக்கள் மூலமாக ஒளிப்பதிவு செய்ய நடவடிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தேர்வு மையத்திற்கு தேர்வர்கள் ஒரு மணி நேரம் முன்பாக அவசியம் காலை 8:30 மணிக்கு வருகை புரிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத காரணங்கள் ஏதேனும் இருப்பின் கூடுதலாக 9:00 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள்.
9:00 மணிக்கு பிறகு வருகை தரும் தேர்வர்கள் தேர்வுக்கூடத்திற்குள் அனுமதி இல்லை. தேர்வர்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்த தேர்வுக் கூட அனுமதிச் சீட்டு உடன் தேர்வு மையத்திற்கு குறித்த நேரத்திற்குள் வர வேண்டும்.
ஆதார் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், நிரந்தர கணக்கு எண், வாக்காளர் அடையாள அட்டையின் அசல் (அல்லது) நகல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் நகல் கொண்டு வர வேண்டும்.
இதுகுறித்து கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறுகையில், 'ஒவ்வொரு தேர்வு மையங்களிலும், மாணவர்களின் நலன் கருதி குடிநீர், கழிவறை, தடையில்லா மின்சார வசதி, காவல்துறையினரின் பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வினாத்தாட்கள் மற்றும் விடைத்தாட்களை பாதுகாப்பாக கொண்டு செல்ல ஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாப்புடன் கூடிய வாகன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்துத்துறை சார்பில், மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு உரிய நேரத்தில் செல்ல தேவையான போக்குவரத்து வசதிகளும் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றார்.