/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாநகராட்சி, நகராட்சியுடன் கிராமங்களை இணைக்க எதிர்ப்பு வலுக்கிறது! கடலுார், பண்ருட்டி, சிதம்பரம் பகுதி பொதுமக்கள் போர்க்கொடி
/
மாநகராட்சி, நகராட்சியுடன் கிராமங்களை இணைக்க எதிர்ப்பு வலுக்கிறது! கடலுார், பண்ருட்டி, சிதம்பரம் பகுதி பொதுமக்கள் போர்க்கொடி
மாநகராட்சி, நகராட்சியுடன் கிராமங்களை இணைக்க எதிர்ப்பு வலுக்கிறது! கடலுார், பண்ருட்டி, சிதம்பரம் பகுதி பொதுமக்கள் போர்க்கொடி
மாநகராட்சி, நகராட்சியுடன் கிராமங்களை இணைக்க எதிர்ப்பு வலுக்கிறது! கடலுார், பண்ருட்டி, சிதம்பரம் பகுதி பொதுமக்கள் போர்க்கொடி
ADDED : ஜன 30, 2025 09:14 PM

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் நகராட்சி, மாநகராட்சியுடன் கிராமங்களை இணைப்பதற்குபொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு வலுத்து வருகிறது.
கடலுார் நகரம், கடந்த 2021ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. மாநகராட்சியின் மக்கள் தொகை இரண்டு லட்சமாகவும், பரப்பளவு 27.65 சதுர கிலோ மீட்டராகவும் உள்ளது. பரப்பளவை அதிகரிக்க அருகிலுள்ள பெரிய கங்கணாங்குப்பம், உச்சிமேடு, நாணமேடு, குண்டுஉப்பலவாடி, பச்சையாங்குப்பம், குடிகாடு, கடலுார் முதுநகர், கரையேறவிட்ட குப்பம், அரிசி பெரியாங்குப்பம், திருவந்திபுரம், பாதிரிக்குப்பம், தோட்டப்பட்டு, கோண்டூர், நத்தப்பட்டு, மருதாடு, வெள்ளப்பாக்கம், சேடப்பாளையம், காரைக்காடு மற்றும் செம்மங்குப்பம் ஆகிய 19 கிராமங்களை மாநகராட்சியுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டு, கடந்த 23.9.2021ல் மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நகராட்சி, மாநகராட்சிகளில் கிராமங்களை சேர்த்தால் 24 மணி நேரம் மின்சாரம், சிறந்த குடிநீர், தரமான சாலை வசதி, போக்குவரத்து, துாய்மை, சிறந்த கல்வி நிறுவனங்கள், மருத்துவம் போன்றவை மக்களுக்கு எளிதில் கிடைக்கும் என 'ஆசை' வார்த்தைகள் சொல்லப்பட்டது. ஆனால் மாநகராட்சியில் கிடைக்கும் சலுகைகள் எல்லாம் கிராமங்களிலேயே கிடைக்கிறது.
அவ்வாறு இருக்கும் போது, வரி வசூலில் இவ்வளவு தீவிரம் காட்டும் நிர்வாகத்திடம் ஏன் இணைய வேண்டும் என கிராம மக்கள் முடிவு செய்து எதிர்க்க துவங்கிவிட்டனர். அதில் குடிகாடு உட்பட பல்வேறு கிராமங்கள், மாநகராட்சியில் சேர்க்க கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
அதேபோல், பண்ருட்டி ஒன்றியத்தைச் சேர்ந்த எல்.என்.புரம், பூங்குணம் ஊராட்சிகளை, நகராட்சியுடன் இணைக்க அரசாணை வெளியிடப்பட்டது. இதற்கு அக்கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலைமறியல், ரேஷன்பொருட்கள் வாங்காமல் புறக்கணிப்பு உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் தரப்பில் நடத்தப்பட்ட கருத்துகேட்பு கூட்டத்திலும் பொதுமக்கள் எழுத்துப்பூர்வமாக தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
சிதம்பரம் நகராட்சியோடு பள்ளிப்படை, உசுப்பூர், லால்புரம், சி.தண்டேஸ்வரர் நல்லுார், நான் முனிசிபல், சி.கொத்தங்குடி உள்ளிட்ட ஊராட்சிகளை இணைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து லால்புரம் ஊராட்சி மக்கள் துணைமுதல்வருக்கு அஞ்சல்அட்டை அனுப்பும் போராட்டம், சாலை மறியல் போராட்டம் என அடுத்தடுத்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
சி.கொத்தங்குடி கிராமத்தினர் கிராமசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். உசுப்பூர், பள்ளிப்படை உட்பட மற்ற கிராமத்தினரும் நகராட்சியுடன் இணைப்பதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது இணைப்பு விவகாரம் தீவிரமாகியுள்ள நிலையில், கிராம மக்களிடம் எதிர்ப்பு அலையும் தீவிரமாகியுள்ளது.
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், மாநகராட்சியுடன் சேர்ப்பதால் வீட்டு வரி, வீட்டு மனை அப்ரூவல், காலி மனை வரி, குடிநீர் வரி போன்றவை பல மடங்கு உயரும். அதேபோல் கிராமங்களுக்கு கிடைக்கக்கூடிய நுாறுநாள் வேலை திட்டம், இலவச வீட்டுமனைப்பட்டா போன்ற சலுகைகளும் தடைபடும். எனவே, விருப்பமில்லாத மக்களை நகர வாழ்க்கைக்குள் கட்டாயப்படுத்தி திணிக்க முயற்சிக்கும் நடவடிக்கைகளை அதிகாரிகள் கைவிட வேண்டும் என தெரிவித்தனர்.