ADDED : ஜன 02, 2025 11:06 PM

பண்ருட்டி; பண்ருட்டி அடுத்த எல்.என்.புரம், பூங்குணம் ஆகிய இரு ஊராட்சிகளை, நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், வி.கே.டி., சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பண்ருட்டி ஒன்றியம், எல்.என்.புரம் ஊராட்சி, பூங்குணம் ஊராட்சியை பண்ருட்டி நகராட்சியுடன் இணைக்க அக்கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து நேற்று காலை 9:30 மணிக்கு வி.கே.டி.தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். 200 பெண்கள் உள்ளிட்ட 400 பேர் மறியலில் ஈடுபட்டனர்.
பண்ருட்டி டி.எஸ்.பி., ராஜா, தாசில்தார் ஆனந்த், புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர்கள் அசோகன், நந்தகுமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, வரும் 7ம் தேதி, இது தொடர்பாக கருத்துகேட்பு கூட்டம் நடத்தப்படும். அப்போது உங்கள் கருத்தை தெரிவிக்கலாம் என, தெரிவிக்கப்பட்டது. அதையேற்று, பகல் 11:30 மணிக்கு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் வி.கே.டி.தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.
தொடர்ந்து, சூரக்குப்பம் பகுதி மக்கள் பண்ருட்டி நகராட்சியுடன் பூங்குணம் ஊராட்சி இணைக்க எதிர்ப்பு தெரிவி்த்து கடலுார்- விழுப்புரம் சாலை சூரக்குப்பம் கிராமம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக 11:45 மணிமுதல் 12:45 வரை 1:00 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.