வாழ்க்கையில் உயர அடித்தளம் சிறந்த ஆசிரியர்களை பணியில் அமர வைத்து அனைத்து மாணவர்களையும், அனைத்து துறைகளிலும் முன்னேற வைத்த சிறந்த பள்ளி. பள்ளி நிர்வாகத்தின் கடுமையான முயற்சியால் பல ஏழை மாணவர்கள் தங்களது வாழ்க்கையில் உயர்ந்த இடத்திற்கு செல்வதற்கு அடித்தளமாக இருந்தது. நான் இந்த பள்ளியில் படித்த மாணவர் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இப்பள்ளி நிர்வாகம், இங்கு பயிலும் மாணவர்களும் வாழ்வில் உயர வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். அகர்சந்த், உரிமையாளர், ஸ்ரீ ஜெயின் ஜூவல்லரி, விருத்தாசலம். மாணவர்கள் சாதனை இப்பள்ளி எனது தாத்தா தர்மலிங்கம், மற்றும் எனது மாமா வீராசாமி ஆகியோரால் துவங்கப்பட்டது. இந்த பள்ளி துவங்குவதற்கு முன்பு இப்பகுதி மக்கள் 8ம் வகுப்பிற்கு மேல் படிக்க சிதம்பரம் செல்ல வேண்டிய நிலை இருந்தது. இதனால் பெரும்பாலான மாணவர்கள் மேல் படிப்பு படிக்க முடியாமல் வேலைக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. இப்பள்ளி துவங்கிய பிறகு மாணவர்கள் மேல் படிப்பை சிரமம் இல்லாமல் தொடர முடிந்தது. இங்கு படித்த பலர் பல துறைகளில் சாதனை படைத்து வருகின்றனர். நான் இந்தப் பள்ளியிலேயே படித்து ஆசிரியர் மற்றும் உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளேன். தர்மலிங்கம், உதவி தலைமை ஆசிரியர் (ஓய்வு) சமூக பணிகளில் ஆர்வம் இப்பள்ளியில், 2019ம் ஆண்டு முதல் தலைமை ஆசிரியராக பணிபுரிகிறேன். இங்கு, 40க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். பண்பு, பணிவு, ஒழுக்கம் ஆகியவற்றை தாரக மந்திரமாக கொண்டு மாணவர்களுக்கு கற்றுத் தருகிறோம். என்.எஸ்.எஸ்., ஜே.ஆர்.சி., சாரணர் இயக்கம், தேசிய பசுமைப்படை, சுற்றுச்சூழல் மன்றம் உள்ளிட்ட அமைப்புகளில் மாணவர்களை சேர்த்து சமூக பணிகளில் ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறோம். மாணவர்களுக்கு திறனறி தேர்வுகளில் பங்கேற்க பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கு, பணிபுரிவதை பெருமையாக கருதுகிறேன். பழமுதிர்ச்சோலை, தலைமை ஆசிரியர். கலங்கரை விளக்கம் பெருநகரங்களுக்கு இணையான கல்வி, ஒழுக்கம் மற்றும் மாணவர்களின் சிறப்பான எதிர்காலத்திற்கான வழிகாட்டுதலையும் இப்பள்ளி வழங்குகிறது. சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்கள் மற்றும் அடித்தட்டு மக்களுக்கும் கல்விப்பணியாற்றி வேற்றுமையில் ஒற்றுமையை ஏற்படுத்துவதில் கலங்கரை விளக்கமாக திகழ்கிறது. பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் இடையே சிறந்த புரிதல் இருப்பதால் மாணவர்களின் குடும்ப சூழல் அறிந்து ஆசிரியர்கள் கல்வி பயிற்றுவிப்பது மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதனால் ஆசிரியர்களின் வழிகாட்டுதல்களை மாணவர்கள் திறமையோடு பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு அதிகமாக உள்ளது. சிறந்த ஆளுமையுடன் பணிபுரிந்த முன்னாள் தலைமை ஆசிரியர் ரத்தினசபாபதி ஒவ்வொரு மாணவரையும் தன்னுடைய குழந்தையாக நினைத்து அன்பு காட்டினார். இவரையும், தாவரவியல் ஆசிரியர் அறிவழகன் ஆகியோரையும் இந்நேரத்தில் நன்றியோடு நினைவு கூறுகிறேன். கணித ஆசிரியர் பாண்டியன், இயற்பியல் ஆசிரியர் சுப்பிரமணியம் ஆகியோர் ஒவ்வொரு வகுப்பின் போதும் கரும்பலகையில் கைவலிக்க எழுதி பாடம் கற்பித்து வழிகாட்டினர். பல்வேறு சிறப்பு வாய்ந்த இப்பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். டாக்டர். குலோத்துங்க சோழன், ரத்தப்பிரிவு தலைமை மருத்துவர், அரசு மருத்துவமனை, விருத்தாசலம். 100 சதவீதம் தேர்ச்சி பொருளாதாரத்தில் பின்தங்கிய கிராமப்புற பகுதியில் கடந்த 75 ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து சமுதாய மக்களும் பயன்பெறும் வகையில் துவங்கப்பட்ட இப்பள்ளியில் கடந்த 2000ம் ஆண்டு முதல் முதுகலை பொருளியல் ஆசிரியராக பணிபுரிகிறேன். 2005 முதல் 2010 வரை என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலராக பணியாற்றி உள்ளேன். எனது பாடத்திட்டத்தில் மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருகின்றனர். என்னிடம் படித்த மாணவர்கள் பல்வேறு துறைகளில் வல்லுநர்களாகவும், சுய தொழிலும் செய்தும் சிறந்து விளங்குகின்றனர். கமலக்கண்ணன், உதவி தலைமை ஆசிரியர். பள்ளியில் படித்தது பெருமை நான் இப்பள்ளியில் படித்து இங்கேயே படித்து ஆசிரியராக 29 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளேன். பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் பண்பு, பணிவு, ஒழுக்கம் ஆகியவற்றை மையமாக வைத்து பாடம் கற்பிக்கின்றனர். பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து நடத்திய நிகழ்ச்சியில் தங்களது ஆசிரியர்களை கவுரவித்து ஆசி பெற்ற நிகழ்ச்சி சிறப்பானது. பவள விழா காணும் இப்பள்ளி மேலும் பல வல்லுநர்களை உருவாக்கி சிறந்து விளங்க வாழ்த்துகிறேன். சக்கரவர்த்தி, முதுகலை ஆசிரியர் (ஓய்வு). மக்களின் அடையாளம் ஸ்ரீமுஷ்ணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான மக்களின் அடையாளம் இப்பள்ளி. தற்போதுள்ள சூழ்நிலையில் மாணவர்களுக்கு கல்வியோடு பள்ளியின் மந்திர சொற்களான பண்பு, ஒழுக்கம், பணிவு ஆகியவற்றை கற்பித்து வருகிறோம். நான் கல்வி பயின்ற இப்பள்ளியிலேயே ஆசிரியராக பணியாற்றுவது எனக்கு கிடைத்த வரமாக கருதுகிறேன். கொரோனா தொற்று காலத்தில் பள்ளி சார்பில் மாணவர்களின் கிராமங்களுக்கு சென்று ஆசிரியப்பணி செய்தது மறக்க முடியாத அனுபவம். பல தலைமுறையாக ஏழை மாணவர்களின் வாழ்வாதாரம் உயர உறுதுணையாக இப்பள்ளியில் உறுதுணையாக உள்ளது. பாலன், பட்டதாரி ஆசிரியர். மாணவர்கள் நலனில் அக்கறை 1992ம் ஆண்டு இடை நிலை ஆசிரியராக பணிபுரிகிறேன். கடந்த 2000ம் ஆண்டு கல்வி மாவட்ட அளவில் ஜே.ஆர்.சி., இணை அமைப்பாளராக பணியாற்றினேன். கடந்த 2004ம் ஆண்டு சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று ஜே.ஆர்.சி., சார்பில் மாணவர்களை அழைத்துச்சென்று சமூக சேவையாற்றியது குறிப்பிடத்தக்கது. மேலும், இப்பகுதியில் நடக்கும் கோவில் திருவிழாக்களில் ஜே.ஆர்.சி. மாணவர்களை பங்கேற்க செய்து, சமூக சேவையின் முக்கியத்துவத்தை கற்றுத்தருகிறோம். மாணவர்களின் நலனில் முழு அக்கறையோடு செயல்பட்டு பவள விழா காணும் இப்பள்ளியில் பணியாற்றுவது பெருமையாக உள்ளது. அருள்தாஸ், இடைநிலை ஆசிரியர். பழமையான பள்ளி கடலுார் மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் இப்பள்ளி மிகவும் பழமையானது. இந்த ஆண்டு பவள விழாவை கொண்டாடி வருகிறோம். பள்ளி நிர்வாகம் மற்றும் தலைமை ஆசிரியருடன் இணைந்து பள்ளியின் வளர்ச்சி மற்றும் மாணவர்கள் முன்னேற்றம் பெறும் வகையில் பணியாற்றுகிறோம். மாணவர்கள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்க ஊக்கமளிக்கும் வகையில் கல்வித்திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம் செல்வமுத்துக்குமரன், உதவி தலைமை ஆசிரியர். நுாற்றாண்டை நோக்கி பயணம் சாதாரண மாணவர்களையும் சாதனை மாணவர்களாக மாற்றிய பெருமை இப்பள்ளிக்கு உண்டு. நான் இப்பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை படித்தேன். கணித பாடத்தில் பட்டம் பெற்று தனியார் பயிற்சி பள்ளி நிறுவி கல்விச்சேவையாற்றி வருகிறேன். எண்ணிலடங்காத மருத்துவர்கள், சட்ட மேதைகள், பொறியியல் வல்லுநர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் அரசியல் நிபுணர்களை உருவாக்கிய சிறந்த பள்ளி. 75 ஆண்டுகளை கடந்து நுாற்றாண்டை நோக்கி செல்லும் இப்பள்ளியின் முன்னாள் மாணவர் என்பதில் பெருமை கொள்கிறேன். செல்வராசு, கணித ஆசிரியர். திறமையான ஆசிரியர்கள் இங்கு, 18 ஆண்டுகள் முதுகலை ஆசிரியராக பணியாற்றினேன். ஒரு ஆண்டு தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். கடந்த 2017 ஆண்டு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்றேன். இப்பள்ளி செயலர் செந்தில்நாதன் மேற்பார்வையில் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் பல்வேறு கல்வி நிறுவங்களை உருவாக்கியுள்ளனர். ஆசிரியர்களின் திறமைகளை மதிப்பதால் ஆசிரியர்கள் தங்களது மாணவர்களுக்கு கல்வியில் முழு கவனம் செலுத்தும் சூழலை உருவாக்கி தருகின்றனர். மாணவர்களுக்கு சிந்தனை திறன், விளையாட்டு, உடற்பயிற்சி, யோகா, கலாச்சார நிகழ்ச்சிகள் மூலம் உடல் மற்றும் மனம் சமநிலையை அடையும் வகையில் தனி கவனம் செலுத்தி சவால்களை எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையை உருவாக்கி வருகின்றனர். செல்வராஜ், தலைமை ஆசிரியர் (ஓய்வு) மக்களின் ஆலமரம் நான் இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவி என்பதில் பெருமை கொள்கிறேன். இங்கு, நான் பெற்ற கல்வியறிவால் நான் பணியாற்றி வரும் ஜெகதளா ஊராட்சி ஒன்றிய பள்ளி தமிழக அளவில் சிறந்த பள்ளியாக விருது பெற்றுள்ளது. நான் தற்போது ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் மாவட்ட கருத்தாளராக உயர்ந்து நிற்க காரணமான பள்ளி என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஸ்ரீமுஷ்ணம் பகுதி மக்களின் ஆலமரமாக விளங்கிய பள்ளியின் பவள விழா சிறக்க வாழ்த்துகிறேன். செல்வபாரதி, இடைநிலை ஆசிரியர். பள்ளி வளர்ச்சிக்கு உறுதுணை நான் 1984 மற்றும் 1986 ஆகிய ஆண்டுகளில் இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர். நான் படித்த இப்பள்ளியிலேயே கடந்த 2004ம் ஆண்டு கணித ஆசிரியராக பணியாற்றும் வாய்ப்பை வழங்கிய நிர்வாகத்திற்கு நன்றி. பின்தங்கிய நிலையில் இருந்த ஸ்ரீமுஷ்ணம் பகுதி மக்களின் முன்னேற்றத்திற்கு பெரும் உதவியாக உள்ளது இப்பள்ளி. எனது வாழ்வில் நான் உயர்ந்த நிலையில் இருக்க அடித்தளமாக இருந்தது இப்பள்ளி. 2014 முதல் 2019 வரை ஜே.ஆர்.சி., ஆலோசகராக இருந்து பள்ளியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தேன். கணித பாடத்தில் மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சி பெற செய்தேன். பழமலை, பட்டதாரி ஆசிரியர். சிறந்த வாய்ப்பு தமிழக அரசு 1978ம் ஆண்டு கல்வித்துறையில் மேல்நிலைக்கல்வியை அறிமுகப்படுத்தியது. அப்போதைய தென்னாற்காடு மாவட்டத்தின் பின்தங்கிய இப்பகுதியில் பள்ளி நிர்வாகத்தினர் வேளாண் கல்வியை அறிமுகப்படுத்தினர். விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்ட ஸ்ரீமுஷ்ணம் சுற்று வட்டார பகுதியில் உள்ள ஏழை, எளிய மக்கள் வேளாண் பாடத்தை படிக்க சிறந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தனர். இதன் மூலம் 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசு மற்றும் தனியார் துறையில் வேளாண் அதிகாரிகளாக பணியாற்றி வருகின்றனர். மாணவர்களின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட அடித்தளமாக இருந்த பள்ளியில் வேளாண் ஆசிரியராக பணியாற்றினேன். குப்புசாமி, வேளாண் ஆசிரியர் (ஓய்வு). முன்னோடி பள்ளி இப்பள்ளி மாவட்டத்தின் முன்னோடியாக திகழும் அரசு உதவி பெறும் பள்ளி. 1991-92ம் கல்வியாண்டில் பிளஸ் 2 படித்தேன். தற்போது வணிகர் சங்க பேரவையின் கடலுார் தெற்கு மாவட்ட செயலாளராக உள்ளேன். பல அறிஞர்களை உருவாக்கியதில் முக்கிய பங்காற்றும் பள்ளி. கடந்த 2022ம் ஆண்டு நடந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு படித்த மாணவர்கள் சார்பில் இணையதள வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறை ஏற்பாடு செய்து கொடுத்தனர். ராமமூர்த்தி, முன்னாள் மாணவர். பள்ளி நிர்வாகத்திற்கு நன்றி நான் படித்த இப்பள்ளி தற்போது பவள விழா கொண்டாடுவது சிறப்பாக உள்ளது. நான் கும்பகோணத்தில் வழக்கறிஞராக பணிபுரிகிறேன். எனது வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய அடித்தளமாக இருந்தது இப்பள்ளி. பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடத்த அனுமதி அளித்து சிறப்பித்த நிர்வாகத்திற்கு நன்றி. பழனிவேல், வழக்கறிஞர். பல துறைகளில் சாதனை ஸ்ரீமுஷ்ணம் நகரில் ஆலமர விழுதாக அனைத்து தரப்பினரையும் உயர்த்திய பெருமை பள்ளி நிர்வாகத்தினரையே சேரும். பள்ளி பவள விழா கொண்டாடும் நிலையில் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கலை, இலக்கியம், மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன். ஞானசேகரன், தமிழாசிரியர் (ஓய்வு) மாணவர்களுக்கு பயிற்சி மாணவர்களின் திறமைகளை அறிந்து பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க உரிய பயிற்சி வழங்கி வருகிறோம். தேசிய அளவில் நடக்கும் போட்டிகளில் மாணவர்களை கலந்து கொள்ள செய்து வெற்றி பெற்று வாழ்வில் சிறந்து விளங்க பாடுபடுகிறோம். இரண்டு முறை தேசிய அளவில் நடந்த போட்டிகளுக்கு குழு மேலாளராக செயல்பட்டுள்ளேன். இப்பள்ளி மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் 2011 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் தேசிய அளவில் விருது பெற்றுள்ளனர். மாணவர்கள் உடற்கல்வித்துறையில் சிறப்பாக செயல்பட்டு காவல்துறை, தீயணைப்பு துறை, பள்ளி, கல்லுாரிகளில் உடற்கல்வித்துறையிலும் சிறந்து விளங்குகின்றனர். கீதா, உடற்கல்வி ஆசிரியை. சமூக சேவையின் முக்கியத்துவம் 1950ம் ஆண்டு துவங்கப்பட்ட இப்பள்ளியில் படித்து, இங்கேயே ஆசிரியராக பணியாற்றுவதை பெருமையாக கருதுகிறேன். கிராமப்புறத்தில் ஏழை, எளிய மாணவர்கள் உயர்கல்வி பெற்று பயன்பெறும் வகையில் பள்ளி துவங்கப்பட்டது. தற்போது நாட்டு நலப்பணித்திட்ட அலுவலராக பொறுப்பேற்று மாணவர்களுக்கு சமூகசேவையின் முக்கியத்துவத்தை கற்பித்து வருகிறோம். தினகரன், முதுகலை பட்டதாரி ஆசிரியர்.