ADDED : ஜூன் 06, 2026 04:56 AM

புவனகிரி: தினமலர் செய்தி எதிரொலியால், பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டியை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
புவனகிரி ஒன்றியம், மருதுார் ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவியது. இதனால் அப்பகுதியினர் பலரும் குடிநீருக்கு மிகுந்த அவதியடைந்தனர். இது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.
இதையடுத்து ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் அன்பரசு நேரில் ஆய்வு செய்து அதிகாரிகளிடம், விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
அதன் பின் ஒன்றிய பொறியாளர் ரவிச்சந்திரன், துணை பி.டி.ஓ., சங்கரி, ஊராட்சி செயலர் பழனி இளங்கோவன் உள்ளிட்டோர் புதிய மோட்டார் அமைத்து, பைப்லைன் மூலம் உயர்மட்ட தொட்டியில் தண்ணீர் ஏற்றி, குழாய் மூலம் வினியோகித்தனர். இதனால் அப்பகுதியினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
