ADDED : பிப் 06, 2025 07:19 AM

விருத்தாசலம்; விருத்தாசலம் பூந்தோட்டம் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்படுகிறது. இங்கிருந்து நேற்று மாலை 700 நெல் மூட்டைகள் ஏற்றிக் கொண்டு டாரஸ் லாரி ஒன்று, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குக்கு புறப்பட்டுச் சென்றது.
விருத்தாசலம் - சேலம் புறவழிச் சாலையில், மணவாளநல்லுார் பிரிவு சாலையில் இருந்து திரும்பியபோது, ஆபத்தான வளைவில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், லாரியில் இருந்த நெல் மூட்டைகள் சாலையில் சிதறின.
தகவலறிந்த நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலர்கள், சுமைதுாக்கும் தொழிலாளர்கள் உதவியுடன், நெல் மூட்கைளை மாற்று லாரியில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர்.
விசாரணையில், அதிக பாரம் ஏற்றிச் சென்றதால் வளைவில் திரும்பிய போது லாரி கவிழ்ந்தது தெரிய வந்தது.
விபத்து காரணமாக, விருத்தாசலம் - சேலம் புறவழிச் சாலையில் 25 நிமிடங்கள் போக்குவரத்து பாதித்தது. தப்பியோடிய லாரி டிரைவர் குறித்து விருத்தாசலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.