UPDATED : அக் 05, 2026 12:00 AM
ADDED : அக் 04, 2026 06:04 PM

சேத்தியாத்தோப்பு: அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்துள்ள நெல் மூட்டைகளை நெடுஞ்சாலையில் அடுக்கி வைத்துள்ளதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே உள்ள வாக்கூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் கடந்த ஆகஸ்ட் மாதம் திறந்து விவசாயிகளிடம் நெல்லை கொள்முதல் செய்து வந்தனர்.
கொள்முதல் நிலையம் கடந்த, 30 ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் கொள்முதல் செய்துள்ள ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகளை நெடுஞ்சாலையில் அடுக்கி வைத்துள்ளனர்.
இதனால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும்அபாயம் உள்ளது. மேலும், இப்பகுதியில் உள்ள பல கொள்முதல் நிலையங்களில், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் சேமிப்பு கிடங்குகளுக்கு எடுத்து செல்லப்படாமல் வெட்ட வெளியில் பாதுகாப்பற்ற முறையில் தார்ப்பாய் கொண்டு மூடி வைக்கப்பட்டுள்ளன.
வரவிருக்கும் மழைக்காலத்தில் அவை நனைந்து முளைத்து பாழாகும் என்றும், இதனால் அரசு பணம் விரையமாகும் என்றும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
விபத்துகளை தவிர்க்க சாலையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள மூட்டைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.
தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை கனரக வாகனங்கள் மூலம் பாதுகாப்பான சேமிப்பு கிடங்குகளுக்கு விரைந்து கொண்டு செல்ல வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கும் கொள்முதல் நிலைய அதிகாரிகளுக்கும் விவசாயிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
