/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெண்ணாடம் குறுவட்டம் பிரிக்கப்படுமா; மக்களின் அவதி தொடர்கிறது
/
பெண்ணாடம் குறுவட்டம் பிரிக்கப்படுமா; மக்களின் அவதி தொடர்கிறது
பெண்ணாடம் குறுவட்டம் பிரிக்கப்படுமா; மக்களின் அவதி தொடர்கிறது
பெண்ணாடம் குறுவட்டம் பிரிக்கப்படுமா; மக்களின் அவதி தொடர்கிறது
ADDED : பிப் 21, 2024 07:32 AM
திட்டக்குடி தாலுகாவில் திட்டக்குடி கிழக்கு, மேற்கு, தொழுதூர், பெண்ணாடம் ஆகிய நான்கு குறுவட்டங்கள் உள்ளன. அதில், திட்டக்குடி கிழக்கு 25; மேற்கு 19; தொழுதூரில் 21 வருவாய் கிராமங்கள் உள்ளன.
ஆனால், பெண்ணாடம் குறுவட்டத்தில் 44 வருவாய் கிராமங்கள் அடங்கிய மிகப்பெரிய குறுவட்ட தலைமையிடமாக உள்ளது. மேலும், இக்குறுவட்டத்தில் பல கிராமங்கள் துணை கிராமங்களாகவே உள்ளன.
மற்ற குறு வட்டங்களை விட இரண்டு மடங்கு வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய பெண்ணாடம் குறுவட்டத்திற்கு ஒரு வருவாய் ஆய்வாளர் மட்டுமே உள்ளதால் கிராமங்களை நிர்வகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த குறு வட்டத்தின் கடைகோடி கிராமங்களான மதுரவல்லி, கோவிலுார், தீவளூர், பாசிக்குளம், குருக்கத்தஞ்சேரி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு சான்றிதழ் பெற 15 முதல் 20 கி.மீ., துாரமுள்ள பெண்ணாடம் வர வேண்டியுள்ளது.
இதனால் முதியோர், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் சிரமம் அடைகின்றனர். கிராமங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் ஏற்பட்டால் குறித்த நேரத்திற்கு மாவட்ட நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவிக்க முடியாத நிலை தொடர்கிறது. பெண்ணாடம் குறுவட்டத்தை இரண்டாக பிரிக்க கிராம மக்கள், வருவாய்த்துறையினர் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.
எனவே, பெண்ணாடம் குறுவட்ட வருவாய் கிராமங்களை ஆய்வு செய்து இரண்டாக பிரிக்க மாவட்ட நிர்வாகம், இரு அமைச்சர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

