/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பொங்கல் பரிசு தொகுப்பில் பன்னீர் கரும்பு இடம் பெறுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு
/
பொங்கல் பரிசு தொகுப்பில் பன்னீர் கரும்பு இடம் பெறுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு
பொங்கல் பரிசு தொகுப்பில் பன்னீர் கரும்பு இடம் பெறுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு
பொங்கல் பரிசு தொகுப்பில் பன்னீர் கரும்பு இடம் பெறுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : ஜன 01, 2024 05:43 AM

நடுவீரப்பட்டு: பொங்கல் பரிசு தொகுப்பில் இந்த ஆண்டு, பன்னீர் கரும்பு இடம் பெற செய்து, அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என, கடலுார் மாவட்டவிவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
கடலுார் மாவட்டத்தில் கடலுார், சிதம்பரம், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, சேத்தியாத்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 750 ஏக்கர் அளவில் பன்னீர் கரும்பு பயிர் செய்யப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் கரும்பு பயிரிடும் விவசாயிகள் அதிக விலைக்கு விற்க முடியுமா, கரும்பு முழுவதும் விற்குமா என்ற நிலையில் தவிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பில், கரும்பை சேர்த்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கி வருகிறது. ஆனால், கொரோனா பாதிப்பு காலங்களில், பன்னீர்கரும்பு பயிரிட்ட விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அடுத்து, 6 அடி உயரமுள்ள கரும்புகளை அரசு கொள்முதல் செய்ய உத்தரவிட்டதால், விவசாயிகளுக்கு மீண்டும் பிரச்னை ஏற்பட்டது.
இதனிடையே, கடந்தாண்டு பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இடம்பெறுமா என்ற நிலை ஏற்பட்டது.
விவசாயிகள் பல கட்ட போராட்டங்களை நடத்தியதன் விளைவால், அரசு சார்பில் கொள்முதல் செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
இப்படியாக, கடலுார் மாவட்டத்தில், பன்னீர் கரும்பு பயிர் செய்யும் விவ சாயிகளுக்கு, அதனை விற்க ஆண்டுதோறும் போராட்டமாக இருப்பதால், மாவட்டத்தில் சாகுபடி கணிசமாக குறைந்துள்ளது.
அப்படி குறைந்த அளவில் பயிர் செய்யப்பட்டுள்ள கரும்பில், இந்தாண்டு செவ்வழுகல் நோய் தாக்கி, மாவட்டத்தின் பல பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தியது. விவசாயிகள் கடும் முயற்சியால் கரும்பை காப்பாற்றி வைத்துள்ளனர்.
இந்நிலையில், பொங்கல் பண்டிகைக்கு 15 நாட் கள் கூட இல்லாத நிலையில், பொங்கல் தொகுப்பில், கரும்பு சேர்க்கப்படுவது குறித்து, தமிழக அரசு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
மேலும், கடலுார் மாவட்டத்தில், 740 ஏக்கர் அளவில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், கடலுார் மாவட்டத்தில் பொங்கல் தொகுப்பில் வழங்க 40 ஏக்கர் கரும்பு மட்டுமே போதும். எஞ்சிய கரும்புகளை பிற மாவட்டங்களில் இருந்து அதிகாரிகள் வந்து கொள்முதல் செய்வர். அதற்கான அறிவிப்பும் இதுவரை அரசு அறிவிக்கவில்லை. தனியார் வியாபாரிகளும் வரவில்லை. இதனால், விவசாயிகள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
எனவே, இந்த ஆண்டு பொங்கல் தொகுப்பில் கரும்பை சேர்ந்து, அரசே கொள்முதல் செய்து, பொது மக்களுக்கு வழங்க வேண்டும் என்றும், அரசு கொள் முதல் செய்யும்போது, 6 அடி நீளம் கரும்பு கொள் முதல் என்பதில் தளர்வு செய்ய வேண்டும் என, அரசுக்கு, கடலுார் மாவட்ட பன்னீர் கரும்பு பயிர் செய்துள்ள விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.